வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளி 3வது நாளாக மக்களவை முடக்கம்

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, மக்களவையில் 3வது நாளாக நேற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 29ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. கடந்த திங்களன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ெஜட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் நாடாளுமன்றம் தொடங்கியதும் விவசாயிகள் போராட்ட பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினமும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேளாண் சட்டம் ரத்து, விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி.க்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று காலை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது விவசாயிகள் விவகாரம் குறித்து பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் பேசியபோது, ‘‘வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை நானே தயாரித்து எடுத்து வந்துள்ளேன். அதை நிறைவேற்றுங்கள்,’’ என்றார்.மாநிலங்களவை முடிந்த பிறகு, மாலை 4 மணிக்கு மக்களவை கூடியது அப்போது, எதிர்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசு மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  அவையின் மையப்பகுதியில் திரண்டு கோஷமிட்டனர். அவர்களை இருக்கைக்கு செல்லும்படி சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பலன் அளிக்கவில்லை.

‘‘கேள்வி நேரம் என்பது எம்பி.க்களின் உரிமை. ஆனால், உங்களின் நடவடிக்கைகள் சரியில்லை,” என்றார். ஆனால், உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவர் அவையை முதலில் 5 மணி வரையும், பின்னர் அடுத்தடுத்து இரவு 8 மணி வரையிலும் ஒத்திவைத்தார். இதனால், தொடர்ந்து 3வது நாளாக மக்களவை முடங்கியது.

கேரள எம்பி ராஜினாமா

கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடப்பதால், இந்திய முஸ்லீம் கட்சியை சேர்ந்த பிகே குன்காலிகுட்டி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை  சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றார்.

அமெரிக்கா ஆதரவு

அமெரிக்க வெளியுறவு துறை நேற்று வௌியிட்ட அறிக்கையில், ‘அமைதியான முறையில் நடக்கும் போராட்டங்கள் வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் அடையாளம். விவசாயிகள் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க வேண்டும். இந்த சட்டங்கள் இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனையும், தனியார் முதலீட்டையும் அதிகரிக்கும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>