×

காட்டுத்தீயை தடுக்க 250 கி.மீ., தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள்

சேலம், மார்ச் 13: சேலம் மாவட்ட வனப்பகுதியில் காட்டுத் தீயை தடுக்க 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் வெட்டப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கோடை வெயில் உச்சம் தொடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரம் காட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் நடப்பாண்டு கோடை வெயில் வழக்கத்தை விட மிக அதிகளவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மார்ச் இறுதி நெருங்குவதற்கு முன்பே, தற்போது தினமும் பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. வனப்பரப்பை பொருத்தளவில், இலையுதிர் காலம் முடிந்திருக்கும் இவ்வேளையில், கோடை வெயிலால் ஆங்காங்கே காட்டுத் தீ பரவி வருகிறது. இதனை தடுக்க வனத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வனக்கோட்டத்திலும் அங்குள்ள மலைகள், குன்றுகளில் காட்டுத் தீ ஏற்படுவதை தவிர்க்க சருகுகள் அகற்றம் மற்றும் தீ தடுப்பு கோடுகள் போடுவதை வன ஊழியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர் என 2 வனக்கோட்டங்கள் உள்ளன. இந்த வனக்கோட்டங்களில் சேர்வராயன் மலை, ஜருகுமலை. சூரியமலை, கோதுமலை, பாலமலை, நகரமலை, கஞ்சமலை, கல்வராயன்மலை மற்றும் பல்வேறு சிறு குன்றுகள் இருக்கின்றன. இந்த வனத்தில் யானை, காட்டுமாடு, கரடி, புள்ளிமான், கடமான், முயல், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள் மற்றும் பல்வேறு பறவையினங்கள் வாழ்விடமாக வசித்து வருகின்றன. இக்கோடையில் வன விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக தீ தடுப்பு நடவடிக்கையை வனத்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.இந்தவகையில், சேலம் வனக்கோட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைத்தொடர், பாலமலை, பச்சமலை, சூரியமலை, கோதுமலைப்பகுதியில் 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகளை வன ஊழியர்கள் போட்டுள்ளனர். இவற்றில் 3 மீட்டர் அகலத்தில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 6 மீட்டர் அகலத்தில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோடுகளை வன ஊழியர்கள், மலைக்கிராம மக்கள் உதவியுடன் போட்டு முடித்துள்ளனர். சேர்வராயன் தெற்கு, சேர்வராயன் வடக்கு, டேனிஷ்பேட்ைட, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகப்பகுதியில் இப்பணியை நிறைவு செய்துள்ளனர். இதேபோல், ஆத்தூர் வனக்கோட்டத்தில் கல்வராயன் மலைப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படும் என கணிக்கப்பட்ட இடங்களில் தீ தடுப்பு கோடுகள் போடப்பட்டுள்ளது. ஆத்தூர், தும்பல், தம்மம்பட்டி, கெங்கவல்லி, கருமந்துறை கல்வராயன் ஆகிய 5 வனச்சரக பகுதியிலும் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பாதை சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் சருகுகளையும் அப்புறப்படுத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், \”சேலம் மாவட்ட வனப்பகுதியில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை வெப்பத்தால் காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில், 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் வெட்டப்பட்டுள்ளது. வனத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் மலைக்கிராம மக்கள் இணைந்து செயல்பட்டு, தீ தடுப்பு பணி மேற்கொள்ள ஒருங்கிணைந்த குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கோடை வெயில் உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். மேலும் வன உயிரினங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்க வனத்தில் ஆங்காங்கே உள்ள கசிவுநீர் குட்டைகள், தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடுகளை செய்து வருகிறோம்,’’ என்றனர்….

The post காட்டுத்தீயை தடுக்க 250 கி.மீ., தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...