கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு: தலைமையாசிரியரை கொண்டாடிய மக்கள் தோளில் சுமந்து தெருத் தெருவாக ஊர்வலம்

திருமலை: மாணவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த கல்வி அளித்த தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை ஆதிவாசி மக்கள் தோளில் சுமந்தபடி மேளதாளம் முழங்க ஊர்வலமாக பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழாவை நடத்தினர். ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், மல்லுகுடா என்ற  கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. வனப்பகுதிக்கு அருகில் உள்ள இப்பள்ளியில் ஏராளமான ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களின் மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் நரேந்திரா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன் இவரை பணிமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர், ஆதிவாசிகளின் மாணவர்களிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார். மேலும், அவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அவரை பிரிய மனமில்லாத மாணவர்கள், தங்கள் பெற்றோர் மூலம் பாரம்பரிய முறைப்படி விழா எடுத்து அவரை உற்சாகத்துடன் வழியனுப்ப முடிவு செய்தனர்.

அதன்படி, மேளதாளத்துடன் நடந்த நிகழ்ச்சியில் நரேந்திராவை  ஆதிவாசி மக்கள் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு தெருக்களில் ஊர்வலமாக வந்தனர். ஆடல், பாடல்களுடன் அவரை புகழ்ந்து உற்சாகமாக நடனமாடினர். அவருக்கு பாதபூஜை செய்தனர். இதனால், நெகிழ்ச்சியில் நரேந்திரா கண்கலங்கினார். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறுகையில், ‘இந்த பள்ளிக்கு வந்த சிறந்த தலைமை ஆசிரியர்களில் இவரும் ஒருவர். இவரை பிரிய மனமில்லை. இருப்பினும், எங்கள்  பாரம்பரிய முறைப்படி அவரை வழியனுப்ப முடிவு செய்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்,’ என தெரிவித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Related Stories:

>