சேத்தியாத்தோப்பு, மார்ச் 7: நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிர்வாகம் தனது சுரங்கம் இரண்டு மற்றும் ஒன்று ஏ விரிவாக்கத்திற்காக அருகே இருக்கக்கூடிய கத்தாழை, கருவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, தென்குத்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் 2000 முதல் 2022ம் ஆண்டு வரை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்திய அனைத்து இனங்களுக்கும் சமமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேத்தியாத்தோப்பில் உள்ள வீராணம் விருந்தினர் மாளிகையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் வளையமாதேவி கிராமத்தில் ஒன்று திரண்டு நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் விவசாயிகள் வாழ்வாதாரம், இழப்பீடு 3 லட்சத்தை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். 2000 முதல் 2022ம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்ட அனைத்து விவசாய நிலங்களுக்கும் என்எல்சி நிர்வாகம் சமமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். நிரந்தர வேலையும் சமமான இழப்பீடும் வழங்க விட்டால் என்.எல்.சி நிறுவனத்திற்கு ஒரு பிடி மண்ணை கூட தரமாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்….
The post என்எல்சி நிர்வாகம் அனைவருக்கும் சமமான இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.
