நாயை துரத்திக் கொண்டு வந்ததால் சிக்கல் ‘கொலைவெறி’யை மறந்த சிறுத்தை: கழிப்பறையில் 7 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

பெங்களூரு: கர்நாடக மாநில தட்சிண கன்னட மாவட்டத்தின் வனப்பகுதியில் உள்ள பிலினெலே கிராமத்தில், ரெப்பா என்பவரின் பண்ணை வீட்டில் கழிவறையில் நாயும், சிறுத்தையும் சிக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறை சரகர் கரிகலன் கூறுகையில், ‘ரெகப்பா என்பவர் வீட்டின் கழிப்பறையில் நாயும், சிறுத்தையும் இருப்பதாகவும், அதனை பூட்டி வைத்திருப்பதாகவும் வனத்துறை தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறை ஊழியர்கள் சென்று சிறுத்தை மற்றும் நாயை வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். கழிப்பறைக்கு வெளியே ஒரு கூண்டு வைக்கப்பட்டு, அதனை சுற்றி ஒரு வலையும் அமைக்கப்பட்டது.

கால்நடை மருத்துவர் குழுவும் வந்து சேர்ந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின் சிறுத்தை வெளியே வந்தது. நாங்கள் வைத்திருந்த கூண்டுக்குள் சிக்கியது. சிறுத்தை வெளியே வந்த சில நிமிடங்களில் நாயும் வெளியே வந்தது. கிட்டதிட்ட 7 மணி நேர போராட்டத்திற்கு பின் நாயையும், சிறுத்தையையும் வெளியேற்றினோம். வனப்பகுதியில் சுற்றித் திரிந்த நாயை துரத்திக் கொண்டு குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை வந்துள்ளது. ஒருகட்டத்தில் நாயானது கழிப்பறைக்குள் நுழைந்ததால், சிறுத்தையும் அங்கே நுழைந்தது. இரு விலங்குகளும் கழிப்பறைக்குள் இருந்த போது பெண் ஒருவர் கழிப்பறைக்குள் நுழைய முயன்றார்.

 

அப்போது சிறுத்தையின் வால் பகுதியை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தார். உடனடியாக கழிப்பறையின் கதவை பூட்டிவிட்டு, எங்களுக்கு தகவல் அளித்தனர். பின்னர் அதிகாரிகளின் மேற்பார்வையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால் 7 மணி நேரமாக ஒரே அறைக்குள் இருந்த சிறுத்தை, அந்த நாயை கொல்லவில்லை என்பதுதான். மீட்பு நடவடிக்கையின் போதும் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மீட்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது’ என்றார்

Related Stories:

>