×

400 ஆண்டுகள் பழமையான புலிக்குத்திபட்டான் கல் கண்டெடுப்பு கிராம மக்கள் வழிபாடு பேரணாம்பட்டு அடுத்த பக்காலப்பல்லி கிராமத்தில்

குடியாத்தம், மார்ச் 14: பேரணாம்பட்டு அடுத்த பக்காலப்பல்லி கிராமத்தில், 400 ஆண்டுகளுக்கு முந்தைய கால புலிக்குத்திபட்டான் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காந்தி நகர் அரசு திருமகள் ஆலை கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் ஜெயவேல் தலைமையில், வரலாற்று துறை 3ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் களஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, பேரணாம்பட்டு அடுத்த பக்காலப்பல்லி கிராமத்தில் ஆய்வு செய்த போது, அங்குள்ள தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை அருகே புலிக்குத்திபட்டான் கல் ஒன்று இருப்பதை கண்டறிந்தனர்.இதுகுறித்து பேராசிரியர் ஜெயவேல் தெரிவித்துள்ளதாவது: பக்காலப்பல்லி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்லானது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, விஜயநகர பேரரசின் கீழ் இருந்த நாயக்கர் கால குறுநில மன்னர்களின் ஆட்சி காலத்தை சேர்ந்தது. இது 5 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட புடைப்பு சிற்பமான புலிக்குத்திபட்டான் கல். பண்டைய காலத்தில் மலையோர பகுதிகளில் வாழ்ந்த மக்கள், தாங்கள் வேளாண்மை செய்வதற்கு உறுதுணையாக கால்நடைகளை வளர்த்து வந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாட வரும் புலி போன்ற விலங்குகளுடன் போராடியதில் வீரர்களோ அல்லது விலங்கினமோ இறப்பதுண்டு. இந்த புடைப்பு சிற்பத்தில் மிக தீர்க்கமாக வாளேந்தி போரிடும் காட்சியை மிக தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இந்த போரின் இறுதியில் வீரன் இறந்திருக்கலாம். அந்த புடைப்பு சிற்பத்தில் இடதுபுறமாக, வீர மரணமடைந்ததை எண்ணி அவனது மனைவி சிவலோகத்திற்கு வாழ்த்தி அனுப்புவது போன்றும், வலதுபுறத்தில் சிவலோகத்திற்கு சென்று வீரன் அருள் பெறுவது போன்றும் மிக நேர்த்தியாக இந்த புடைப்பு சிற்பம் காணப்படுகிறது. தற்போது, இந்த கல்லுக்கு கிராம மக்கள் மஞ்சள் பூசி பொட்டு வைத்து அதே இடத்தில் வைத்து வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

The post 400 ஆண்டுகள் பழமையான புலிக்குத்திபட்டான் கல் கண்டெடுப்பு கிராம மக்கள் வழிபாடு பேரணாம்பட்டு அடுத்த பக்காலப்பல்லி கிராமத்தில் appeared first on Dinakaran.

Tags : Pakkalpalli village ,Peranampatu ,Gudiyattam ,Pakalapalli village ,
× RELATED கிராமத்தில் நுழைந்த 10 யானைகள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே பரபரப்பு