‘‘போதிய அளவுக்கு மண் கிடைக்கவில்லையாம்’’ குமரியில் அழிவின் விழிம்பில் செங்கல் சூளைகள்

நாகர்கோவில்: குமரி மக்களின் வாழ்வாதாரத்தில் உயிர்நாடியாக விளங்குவதில் செங்கல்சூளை தொழிலும் ஒன்று. சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும் இந்த தொழில் மூலம் பயனடைந்து வருகிறார்கள். தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், ராஜாவூர், தாழக்குடி, சந்தை விளை, துவரங்காடு, நாவல்காடு, ஞாலம், இறச்சகுளம், நிலப்பாறை, மகராஜபுரம், மார்த்தால், தெள்ளாந்தி, ஞானதாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளது.

உள்ளூர் மக்களுடன் வெளி மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். செங்கல்சூளை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருள் மண் தான். தொடக்கத்தில் சூளைக்கு தேவையான மண் குளத்தில் இருந்து இலவசமாக எடுக்கப்பட்டது. இதற்கு தடை விதிக்கப்பட்டதால் தனியார் பட்டா நிலங்களில் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியது.

இதேபோல் குளம் தூர்வாரும் போது அதில் உள்ள மண்ணையும் செங்கல் சூளைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியது.  தற்போது ஒரு வருடமாக மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தி விட்டது. இதனால் செங்கல் சூளை நடத்துபவர்கள் நெல்ைல மாவட்டத்தில் இருந்து மண்ணை விலைக்கு வாங்கி வந்தனர். தற்போது அதுவும் தடை செய்யப்பட்டு விட்டது. இதனால் செங்கல் சூளை நடத்துபவர்கள் மண் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். சிலர் செங்கல் சூளை தொழிலை நடத்தாமல் விட்டு விட்டனர். சிலர் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் மண்ணை கொண்டு செங்கல்சூளை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் செங்கல் சூளை தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாரத்தை இழக்கும் நிலை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே தட்டுப்பாடு இல்லாமல் சூளைகளுக்கு மண் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள், உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து குமரி மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜேக்கப் மனோகரன் கூறியதாவது: தோவாளை தாலுகாவில் தொழில் வளர்ச்சி இல்லாததால், காற்றாடி மின்உற்பத்தி, செங்கல்சூளைக்கு அரசு மானியம்  வழங்கியது. இந்த பகுதியில் உள்ள 8 குளங்களில் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கியது. ஒரு யூனிட் வண்டல் மண் ரூ.1000க்கு கிடைத்தது. இதே மண்ணை வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்துவர ரூ.2 ஆயிரம் ஆகிறது. இருப்பினும் தரமான வண்டல் மண் கிடைக்கவில்லை.

தற்போது பொடிமணல், களிமண் உள்பட கிடைப்பதை ஒன்றாக கலந்து செங்கல் தயாரித்து வருகிறோம். ஒரு டெம்போ வண்டல் மண் கொண்டு 1000 செங்கல் செய்யலாம். 21 அடுப்பு கொண்ட செங்கல்சூளைக்கு கலெக்டர் அலுவலகத்தில் ரூ.100 பதிவு கட்டணம், ஒருவருடத்திற்கு ரூ.6500 செலுத்தினால் கனிமவளத்துறை அனுமதி சீட்டு கொடுக்கும்.இதனை கொண்டு தேவையான மண்ணை எடுத்து வரலாம். இந்த நடைமுறை முன்பு இருந்தது. தற்போது மண் எடுக்க அனுமதி வழங்கவில்லை. கடந்த காலங்களை போல சொந்த பட்டா நிலத்தில் மண்எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவேண்டும். அப்படி என்றால்தான் சுயசார்பு தொழிலாக தொடங்கிய இந்த செங்கல் உற்பத்தி தொழிலை காப்பாற்ற முடியும் என்றார்.

ரூ.6க்கு செங்கல் விற்பனை

வெளிமாவட்டங்களில் இருந்து மண் கிடைத்து வந்த நிலையில் ஒரு செங்கல் ரூ.4.25க்கு விற்கப்பட்டது. கொரோனாவால் தொழில் முடங்கியது. வெளி மாவட்டங்களில் இருந்து மண் கிடைப்பது தடைப்பட்டது. ஆகவே 50 சதவீதத்துக்கும் மேல் சூளைகள் மூடப்பட்டுள்ளன. சிலர் போதிய மண் இருப்பு வைத்து  உற்பத்தியை செய்து வருகின்றனர். தற்போது ஒரு செங்கல் ரூ.6க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>