×

கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. எய்ம்ஸுக்கு வெறும் சுற்றுச்சுவரு.. ஓட்டுக்கேட்டு வந்தால் ஒருகை பார்ப்போம்: தென் மாவட்ட மக்கள் காத்திருப்பு

மதுரை:-மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், கட்டுமானப் பணிகள் ஏதும் இதுவரை துவங்கவில்லை. தேர்தல் பிரசாரத்தில் எய்ம்ஸ்  மருத்துவமனையை மிகப்பெரிய சாதனையாக மக்களின் முன்வைக்க வேண்டும் என்று தமிழக பாஜ மற்றும் அதிமுக தலைவர்கள் கனவில் இருந்தனர். வெறும் பேப்பரில்தான் இன்று வரை எய்ம்ஸ்  என்ற நிலையில், பாஜ மற்றும் அதிமுக தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.மத்தியில் 2ம் முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட பாஜ கட்சி, கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை தமிழகத்துக்கு  உருப்படியாக ஏதும் செய்யவில்லை. இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று அறிவிக்கப்பட்ட போது, தமிழக பாஜ தலைவர்கள் உற்சாகமடைந்தனர். கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம்  தேதி, பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டிய போது, கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்கும் என மோடி அறிவித்தார். ஆனால்  அதோடு சரி, எய்ம்சை மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடுப்பாகிப் போன மதுரை வக்கீல் ஒருவர், கடந்த 2020 டிசம்பரில் ஐகோர்ட் கிளையில்  வழக்கு தொடர்ந்தார். அப்போது தமிழக அரசு, ‘‘223 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்து விட்டோம். 45 மாதங்களில் கட்டுமானப்பணி முடிந்து விடும்’’ என்று ஐகோர்ட் கிளையில் தெரிவித்தது.

ஆனால் சுற்றுச்சுவர் கட்டியதோடு சரி. இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணி ஏதும் துவங்கவில்லை. இந்நிலையில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த  பாண்டியராஜா, எய்ம்ஸ் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய அரசின் சார்பு செயலர் ஷாம்பூ குமார் தற்போது அளித்துள்ள அளித்துள்ள பதிலில், ‘மதுரை  எய்ம்சிற்கான திட்ட வரைபடம், மாதிரி வரைபடங்கள் மற்றும் மாஸ்டர் பிளான் தொடர்பான விவரம் எதுவும் இல்லை.  டெண்டர் நடவடிக்கைகள் எப்போது துவங்கி, எப்போது முடியும் என்பது குறித்த  தகவல்களும், கட்டுமானப்பணிகள் எப்போது துவங்கும் என்ற விபரமும் இல்லை. எத்தனை கட்ட பணிகள் நடக்கும்? மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி கட்டிடங்கள் தொடர்பான விவரமும்  இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.இதனால் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வெறுப்பில் உள்ளனர். ‘எய்ம்ஸ் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு வருவார்கள். அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று  காத்திருக்கின்றனர். எய்ம்சை தவிர சாதனை என்று கூறிக் கொள்ள தற்போது கைவசம் ஏதும் இருப்பு இல்லாததால் தமிழக பாஜ தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த விவகாரத்தில் தங்கள்  தலையும் உருளும் என்பதால் தென் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக அமைச்சர்களும் திகைப்பில் உள்ளனர்.



Tags : AIIMS ,South District ,standstill , எய்ம்ஸ் மருத்துவமனை
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...