×

மீனவர்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் : கூவத்தூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திருக்கழுக்குன்றம் : கல்பாக்கம் அருகே கூவத்தூரில், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில், அப்பகுதி மீனவர்களுடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது தங்களின் பிரச்னைகளை கோரிக்கையாக மீனவர்கள் முன்வைத்தனர்.பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘வீட்டுமனை பட்டா, கடலரிப்பை தடுக்க தூண்டில் வளைவு, மீன்பிடி தடை காலத்தில் மானியத்தை உயர்த்தி வழங்க மீனவர்கள் வலியுறுத்தினர். அவற்றை, திமுக தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவோம். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கொடுமைப்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு பாதுகாப்பை மத்திய பாஜ அரசு, மாநில அரசு வழங்குவதில்லை. மீனவர்களின் பாதுகாப்பை திமுக உறுதி செய்யும். தமிழக மீனவர்களுக்கு திமுக எப்போதுமே துணை நிற்கும்’ என்றார்.

முன்னதாக, முகையூரில் நடைபெற்ற திமுக இளைஞரணி சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவது உறுதி. இதற்கு இளைஞரணியினர் முனைப்பாக கட்சி பணிகளில் ஈடுபட வேண்டும். அதிமுகவினரின் அராஜகம், நீட் தேர்வு, அதிமுக அரசில் திட்ட பணிகளில் நடைபெறும் கொள்ளை, அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றியை மக்கள் கொடுத்தனர். அதுபோன்ற வெற்றியை வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளிப்பார்கள். அந்த இடத்தை நோக்கி நாம் உழைக்க வேண்டும்’ என்றார்.நிகழ்ச்சிகளில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, ஜி.செல்வம் எம்பி, ஆர்.டி.அரசு எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Tags : DMK ,fishermen ,Udayanithi Stalin ,Guwahati ,speech , உதயநிதி ஸ்டாலின்
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி