×

பிரசாரம் செய்ய பயிற்சி தாருங்கள் ...அடம்பிடிக்கும் அதிமுக, பாஜவில் இணைந்த பழைய ரவுடிகள்

வேலூர்:தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள் கட்சிகளில் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக பாஜக, அதிமுக இரு கட்சிகளிலும் அதிகளவில் இணைந்துள்ளனர். மாநிலத்தில் ஆளுங்கட்சியாக அதிமுகவும், மத்தியில் பாஜக இருப்பதால் இந்த இரு கட்சிகளில் இணைந்தால்தான் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் எண்ணி பல ரவுடிகள் அங்கு தாவினர். அவர்களுக்கும் கட்சி தலைமை பதவிகள் கொடுத்து அழகு பார்த்துள்ளது. இருப்பினும் அவர்கள் ரவுடிகளாக பார்த்து பழக்கப்பட்ட பொதுமக்கள் இன்று கரைவேட்டியுடன் வருவதால் அலறுகின்றனர். இன்னும் பேச்சு, நடை உடை என அனைத்தும் மாறாமல் இருப்பதால் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் அவர்களை கூட அழைத்து செல்ல அச்சம் அடைகின்றனர்.  இப்படியே இருந்தால் நாம் வளர முடியாது என்ற நிலைக்கு ரவுடிகளும் வந்துவிட்டனர். இதனால் தற்போது புதிய டெக்னிக்கில் இறங்கி உள்ளனர்.

அதாவது, மூத்த நிர்வாகிகளை சந்தித்து தாங்கள் எப்படி பொதுமக்களை அணுகி கட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவது, நாங்களும் உங்களுடன் வந்து கட்சி பணியாற்றுகிறோம் என்று அடம்பிடிக்கின்றனர். ஆனால் கட்சி நிர்வாகிகளோ இவர்களை எல்லாம் நாம் எப்படி பொதுமக்களிடம் அழைத்து செல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இருப்பினும் சில மூத்த நிர்வாகிகள் அவர்களை ஆலோசனை கூட்டங்கள், பூத் கூட்டங்களுக்கு அழைத்து சென்று பயிற்சி கொடுத்து வருகின்றனர். கட்சியில் பொறுப்பு பெற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அதற்காக தினந்தோறும் உழைக்க வேண்டும். உங்களால் கட்சிக்கு வாக்குகள் கூடுதலாக பெற வேண்டுமே தவிர, இருக்கும் வாக்குகளை இழந்துவிட கூடாது என்று மூத்த நிர்வாகிகள் பழைய ரவுடிகளுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளனர்.




Tags : rowdies ,BJP ,AIADMK , பழைய ரவுடிகள்
× RELATED ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்பட மும்முனைப்போட்டி