×

ஒட்டுமொத்த விவசாயத்தையும், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றி விடும் தரகர் வேலையில் மோடி அரசு உறுதி : வேல்முருகன்

சென்னை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை : டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை காவல்துறை மூலம் மோடி அரசு தடுத்து நிறுத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.பாசிச மோடி ஆட்சியின் அடக்குமுறை, மக்களை கிளர்ந்தெழவே செய்யுமே தவிர, அவர்களை முடக்கி விடாது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய வேளாண் சட்டங்கள் வாயிலாக, ஓட்டுமொத்த விவசாயத்தையும், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கைமாற்றி விடும் தரகர் வேலையில் மோடி அரசு உறுதியாக நிற்கிறது.

மோசடியான வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, பல உயிர்களை பறிகொடுத்தும், 71 நாட்களுக்காக போராடி வரும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை காது கொடுத்து கேட்க, மத்திய பாஜக அரசு தயாராக இல்லை.கொரோனா தொற்றைக்காட்டி விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து விடலாம் என பாஜக அரசு, பல்வேறு வழிகளில் நயவஞ்ச சூழ்ச்சிக்களை அரங்கேற்றியது. ஆனால், அச்சசூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து, விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் பேரெழுச்சி பெற்று வருகிறது.

இதன் காரணமாக மிரட்டு போன மோடி அரசு, ஏதோ பாகிஸ்தான், சீனா எல்லைகளில, தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க அரண்களை அமைப்பது போன்று, டெல்லியை இணைக்கும் எல்லை பகுதிகளில், கம்பிகளால் சூழப்பட்ட தடுப்பு அரண்களை அமைத்துள்ளது. முன்னதாக, இணையதள சேவை முடக்கம், விவசாயிகளுக்கு தண்ணீர் விநியோகம் தடுத்து நிறுத்தம் உள்ளிட்ட அதி பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது மோடி அரசு.

 இச்சூழலில்,  நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், ரவிக்குமார், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பலர், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்றுள்ளனர்.

அவர்களெல்லாம் பயங்கரவாதி போன்று, காவல்துறை மூலம் மோடி அரசு தடுத்தி நிறுத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. கருத்துரிமைக்கு விரோதமானது. அதுமட்டுமின்றி, டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, டெல்லி அரசை தன் கடமையைச் செய்யத் தடுத்திருப்பது, சட்டவிரோதமாகும்.
மோடி அரசுக்கு ஒன்றை நினைவுப்படுத்தி கொள்கிறேன்.விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் பேரெழுச்சி பெற்று எழுமே தவிர, அடக்கி விட முடியாது.

 எனவே, வீண் பிடிவாதம் பிடிப்பதை கைவிட்டு, விவசாயிகளுக்கு எதிராக புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் நாடாளுமன்றம் முக்கியமானது. இதனை கருத்தில் கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போராடி வரும் விவசாயிகளை சந்திக்க, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Tags : Modi ,bosses ,Velmurugan ,Ambani , வேல்முருகன்
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...