×

பொள்ளாச்சி அருகே ரூ.3 கோடிக்கு புலித்தோல் விற்க முயன்ற தந்தை, 2 மகன்கள் உள்பட 6 பேர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 100 வருடம் பழமையான புலித்தோலைத் திருடி ரூ.3 கோடிக்கு விற்க முயன்ற தந்தை, 2 மகன்கள் உள்பட 6 பேர் வனத்துறையிடம் சிக்கினர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரக பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நூறாண்டு பழமையான புலித்தோல் ஒன்றை விற்பதற்கு ஒரு கும்பல் பலரிடம் பேரம் பேசி வருவதாக, வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில், வனச்சரகர் புகழேந்தி உள்ளிட்ட வனக்குழுவினர், வேட்டைக்காரன்புதூர் பகுதியில் சாதாரண உடையில் சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் மதியம் வேட்டைக்காரன்புதூர் அசோக்நகரின் பின்பகுதியில் ரோந்து சென்றபோது, கார் மற்றும் இரு சக்கர வாகனத்தின் அருகே, சந்தேகத்தின்படி 5 பேர் கும்பல் நின்றுகொண்டிருந்தது. அவர்களை பிடித்து  வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், முன்னுக்குப்பின், முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் காரை சோதனையிட்டனர். அப்போது, காரின் பின்பகுதியில் இருந்த ஒரு பையில் சுமார் 100 ஆண்டு கடந்த பழமையான புலித்தோல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அக்கும்பலை சேர்ந்த ஆனைமலையை சேர்ந்த பிரவீன் (26), சேத்துமடையை சேர்ந்த உதயக்குமார் (37), ரமேஷ்குமார் (36), மணிகண்டன் (36), ஒடையக்குளத்தை சேர்ந்த சபரிசங்கர் (27) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த புலித்தோல், அதனை மறைத்து வைத்திருந்த கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், புலித்தோல் விற்பனைக்கு மூலக்காரணமாக இருந்தது சேத்துமடையை சேர்ந்த மயில்சாமி (60) என்பதும், கைதான உதயக்குமாரும்,  ரமேஷ்குமாரும் அவரது மகன்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மயில்சாமியையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கூறியதாவது: வேட்டைக்காரன்புதூர் மாரியம்மன் கோயில் அருகே பிரசாத் என்பவரது வீட்டில், சுமார் 15 ஆண்டுக்கு முன்பு வீட்டு வேலை பார்த்தபோது, அங்கிருந்த புலித்தோலை யாருக்கும் தெரியாமல் திருடி எனது வீட்டில் பதுக்கி வைத்தேன். எனது மகன்கள் உதயக்குமார், ரமேஷ்குமார் ஆகியோரின் மூலமாக ரூ.3 கோடிக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து கைதான மயில்சாமி உள்ளிட்ட 6 பேரும் பொள்ளாச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

மயில்சாமி உண்மையிலேயே பிரசாத் என்பவரிடம் பணிபுரிந்தாரா?, அவரது வீட்டில் இருந்துதான் புலித்தோல் திருடப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொள்ளாச்சியில் கடந்த வாரம் அதிர்ஷ்டக்கல் மோசடியில் கேரளாவை சேர்ந்த 22 பேர் கும்பல் சிக்கிய நிலையில் புலித்தோலை திருடி ரூ.3 ேகாடிக்கு விற்க முயன்றதாக 6 பேர் கும்பல் கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Tags : persons ,sons ,Pollachi , Near Pollachi Six persons, including a father and two sons, have been arrested for trying to sell tiger skin for Rs 3 crore
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...