×

கொழுக்குமலையில் அனுமதியின்றி டெண்ட் அமைத்து கொண்டாட்டம்: கேரள சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

போடி: போடி அருகே கொழுக்குமலையில் கேரள சுற்றுலா பயணிகளுக்காக அனுமதியின்றி டெண்ட்கள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலை வரிசையில் உள்ளது கொட்டகுடி ஊராட்சி. இங்கு குரங்கணி, முட்டம், மேல் முட்டம், முதுவாக்குடி, சென்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளல் காபி, மிளகு, ஏலம், தேயிலை, ஆரஞ்சு விவசாயம் நடந்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனங்கள், இயற்கை எழில்மிகுந்த இப்பகுதிகள் மனதிற்கு அமைதி தரும் சோலைகளாக விளங்கி வருகின்றன. குறிப்பாக குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரையில் உள்நாடு, வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிகளவில் மலையேற்ற பயிற்சி சென்று வந்தனர். மேலும் இவர்கள் வெட்டவெளி, அடர்ந்த வனப்பகுதிகளில் டெண்ட் அமைத்து ஜாலியாக தங்கி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி மூணாறில் இருந்து டாப் ஸ்டேஷன், தேவிகுளம் சின்னக்கானல் சூரிய நல்லி வழியாக கொழுக்கு மலை வந்த 23 பேர் ஒத்தமரம் பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த கோர விபத்து காரணமாக உயர்நீதிமன்றம் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதித்து அடைக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் கேரளாவில் மசினகுடி பகுதியில் டெண்ட் அமைத்து தங்கியிருந்த சஹானா என்ற இளம்பெண் வெளியில் வந்து யானை மிதித்து பலியானார். இதன் எதிரொலியாக கேரள அரசு ரிசார்ட்டுகள் டெண்ட் அமைத்து வாடகைக்கு விட தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தற்போது கேரளா வழியாக தமிழக கொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட கொழுக்கு மலை பகுதிக்கு  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு ஆபத்தான முறையில் ஏராளமான டெண்ட்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் ஜாலியாக பொழுதை கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ‘சஹானா இறப்பால் கேரள பகுதியில் டெண்ட் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள சுற்றுலா பயணிகளின் கவனம் கொழுக்கு மலைக்கு திரும்பியுள்ளன. இங்குள்ள ரிசார்ட்தாரர்கள் அனுமதியின்றி ஏராளமான டெண்ட்கள் அமைத்து சரியான வருமானம் பார்த்து வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகமும் தங்களுக்கு கையூட்டு கிடைப்பதால் அதை கண்டும், காணாமல் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அனுமதி தந்தது யார்?. வனத்துறையும், போலீசும் என்ன செய்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் விலங்குகள், காட்டுத்தீயால் ஏதேனும் உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : tent celebration ,Kerala , Unauthorized tent celebration in Kolhukumalai: Kerala tourists invade
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...