×

மூளைச்சாவு அடைந்த விவசாயின் இதயம் மெட்ரோ ரயிலில் பயணம் வேறொருவருக்கு பொருத்தி டாக்டர்கள் சாதனை

திருமலை:தெலங்கானா மாநிலம், வாராங்கலை சேர்ந்தவர் நரசிம்மா,  விவசாயி. இவர் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதில் காயமடைந்தார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். நரசிம்மாவின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 8 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.அவரது இதயத்தை ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகர் காமிநேனி மருத்துவமனையிலிருந்து ஜூபிலி ஹில்ஸ் அப்போலோ மருத்துவமனைக்கு மெட்ரோ ரயில் மூலம் இதயத்தை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி, எல்.பி. நகரிலிருந்து ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்கு ‘கிரீன் சேனல்’ என்று கூறப்படும் தடையில்லா போக்குவரத்து மூலம் இதயத்தை கொண்டு செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இதைதொடர்ந்து நேற்று காமிநேனி மருத்துவமனையிலிருந்து எல்.பி.நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கிரீன் சேனல் மூலம் 5 நிமிடத்தில் இதயத்தை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து 30 நிமிடத்தில் பயணிகளில்லாத ஒரு மெட்ரோ ரயில் மூலம் ஜூப்ளி ஹில்ஸ் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு ஒரு நபருக்கு 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து இதயம் பொருத்தப்பட்டது. இதையடுத்து இதயம் பொருத்தப்பட்டவரின் உறவினர்கள், அந்த விவசாயி இறந்தும் வாழ்கிறார் என நெகிழ்ச்சியுடன் கூறினர்.



Tags : Doctors ,someone ,train , மூளைச்சாவு
× RELATED நெல்லை – சென்னை விரைவு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு