×

சரியெல்லாம் செய்ய முடியாது: எடியூரப்பா அரசை மாற்ற வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் சித்து குற்றச்சாட்டு

பெங்களூரு, பிப்.4: முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசை சரி செய்ய முடியாது. இது மாற்றப்படவேண்டிய அரசாகும் என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆளுங்கட்சியை கடுமையாக சாடினார். பெங்களூரு விதானசவுதாவில் கவர்னர் உரை மீது  நேற்று விவாதம் நடந்தது. மாநில எதிர்க்கட்சி தலைவரும் மாஜி முதல்வருமான சித்தராமையா இதில் பேசியபோது, ``அரசியல் அமைப்புக்கு எதிராக முறைகேடாக அமைந்த ஆட்சி’’ என்று கடுமையாக குற்றம் சுமத்தினார்.

பேரவையில் சித்தராமையா பேசியதாவது, கவர்னர் உரையில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசின் சாதனைக்கு பதில் காங்கிரஸ் அரசின் சாதனைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. பால் உற்பத்தி, இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிப்பது போன்றவை எங்கள் அரசின் சாதனை ஆகும். முதல்வர் எடியூரப்பா கடந்த 2019 ஜூலை 26ல் முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அதுமுதல் இதுவரை மாநில அரசு எந்த துறையிலும் சாதனை படைக்கவில்லை.

முதல்வர் எடியூரப்பா, அமைச்சர் நிராணி ஆகியோர் நிலவிடுவிப்பு புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து  செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது  மூன்று பேர் கொண்ட அமர்வு அதற்கு மறுத்துவிட்டது. அத்துடன் இந்த விவகாரத்தில் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்வதற்கும் தடை விதித்துள்ளது.

அரசியல் அமைப்பு விதிகளுக்கு எதிராக முறைகேடாக அமைந்த பாஜ அரசு பதவியில் நீடிப்பதற்கான முழு தகுதியை இழந்துவிட்டது. எஸ்சி.,எஸ்டி மாணவர்களுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்க முடியாது என்று அரசு அறிவித்து விட்டது. 24 மணி நேரத்தில் மகதாயி பிரச்னைக்கு தீர்வு காண்பேன் என எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எடியூரப்பா சூளுரைத்தார். முதல்வர் பதவியில் அமர்ந்து 2 வருடம் முடிந்த நிலையில் இன்னும் எத்தனை 24 மணிநேரம் இதற்கு தேவைப்படும்? எடியூரப்பா ஆட்சியை சரி செய்ய முடியாது. இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டிய ஆட்சி’ என்றார்.

முதல்வர் சுயபரிசோதனை செய்ய வேண்டும்
சித்தராமையா பேசுகையில், பாஜ ஆட்சியில் துறை ஒதுக்கீடு கூட பலமுறை மாறுகிறது. 5 நாளில் நான்கு முறை துறை ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் முதல்வராக பதவியேற்ற 30 நிமிடத்தில் அன்னபாக்யா உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தினேன். 14 பேர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கி அதற்கு பதில் வேறு நபர்களுக்கு அமைச்சர் பதவி மற்றும் துறைகளும் எவ்வித பிரச்னையும் இன்றி ஒதுக்கீடு செய்தேன்.  முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம், துறை ஒதுக்கீட்டின் போது நடந்த சம்பவத்தை  வைத்து பார்த்தால் முதல்வர் எடியூரப்பாவின் திறமையை அறிந்து கொள்ளலாம். பாதாமி தொகுதி வளர்ச்சிக்கு நிதி கேட்டால் அமைச்சர் ராமுலு மறுக்கிறார், இதுதான் பாஜவின் நிர்வாகம் ஆகும்.  முதல்வர் எடியூரப்பா கண்ணாடி முன் நின்று தன்னை தானே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்றார்.

Tags : Sidhu ,government ,Eduyurappa ,Opposition , Eduyurappa, Leader of the Opposition, accused
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...