×

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மோடி, அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: பிகேயு தலைவர் வலியுறுத்தல்

ஜிந்த் (அரியானா): மெகாபஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மேடை பிளந்து. அமளி, துமளி ஏற்பட்டும்,  விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பாரதிய கிசான் சங்க (பிகேயு) தலைவர் ராகேஷ் திகைய்த் அதே மேடையில் வலியுறுத்தி பேசி, சங்க உறுப்பினர்களை உற்சாகப்படுத்தினார். அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கந்தேலா கிராமத்தின் விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நடத்திய விவசாய போராட்டம் நாடு முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஏற்படுத்தியது. போராட்டம் அப்போது வெற்றி பெற்றதை அடுத்து சர்வ ஜதியா கந்தேலா  விவசாய சங்கம் உருவாகி, அரியானா மாநிலத்தில் வலுவான விவசாய சங்கமாக நீடிக்கிறது. டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தும் விவசாய சங்க கூட்டமைப்புக்கு கந்தேலா விவசாய சங்கமும் ஆதரவளிக்கிறது என தெரிவித்த அதன் தலைவர் தேக்ராம் கந்தேலா, அதை முன்னிட்டு கந்தேலா கிராமத்தில் விவசாயிகளின் மெகாபஞ்சாயத்து பொது கூட்டத்தை நேற்று ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் கலந்து கொள்வதற்காக, டெல்லியின் காஜிப்பூர் எல்லையில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு தலைமை ஏற்றுள்ள பிகேயு தலைவர் ராகேஷ் திகய்த், கந்தேலாவுக்கு நேற்று சென்றார். டெல்லியில் டிராக்டர் பேரணி கலவரத்துக்கு பின், சிதறி ஓடுவார்கள் எனும் மத்திய அரசின் கணிப்பை நொறுக்கி, கண்ணீருடன் உருக்கமான வேண்டுகோள் விடுத்து விவசாயிகளை மீண்டும் போராட்டத்தை வலுவாக்கினார் என்பதால் ராகேஷின் உரையை கேட்பதற்காக விவசாயிகள் கூட்டம் அலை மோதியது. மேடையில் ராகேஷ் ஏறியதும், விவசாய சங்கங்களில் மேலும் பல தலைவர்களும் மேடையில் முண்டி மோதினர். கூட்ட பாரம் தாங்காமல், மேடை அப்படியே பிளந்தது. அதனால் ஏற்பட்ட தள்ளு,முள்ளுவில் பலரும் சரிந்து விழுந்தனர். அதனால் அங்கு பதற்றம் தொற்றியது. எனினும், அச்சப்படாத ராகேஷ், மைக்கைப் பிடித்து, ‘‘யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். ஒருவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. அமைதியாக இருங்கள்’’, எனப் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து ராகேஷ் பேசியதாவது: விவசாயிகளின் நலனுக்கு எதிராக நிறைவேற்றி உள்ள 3 சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெறும்வரை போராட்டம் ஓயாது. கருப்பு சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உறுதி, சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துதல், விவசாய கடன் தள்ளுபடி, குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறைக்கு கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும் எனும் 5 தீர்மானங்களை இந்த பஞ்சாயத்தில் நிறைவேற்றுவோம். அது மட்டுமன்றி, விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு ராகேஷ் பேசினார்.

Tags : Modi ,talks ,Amit Shah ,PKU ,Delhi , Modi, Amit Shah should hold talks with protesting farmers in Delhi: PKU leader insists
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...