×

எம்.டெக் படிப்புகளில் 2 பாடப் பிரிவுகள் ரத்து: பணத்திற்காக படிப்பை ரத்து செய்வதா? அண்ணா பல்கலைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை:  அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அறிவிப்பு வெளியானது.  இதை  எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில், மத்திய அரசின் 49.9 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்ப்பந்தித்ததால்,  2020-2021ம் ஆண்டில் இரு மேற்படிப்புகளுக்கும் மாணவர்  சேர்க்கை கிடையாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது. எனவே, எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி,  பல்கலைகழக முடிவால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எந்த அரசின் ஒதுக்கீடாக இருந்தாலும், நிறுத்தப்பட்ட பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்பட  வேண்டுமென்பதே  மனுதாரர்களின் நோக்கம் என வாதிட்டார். அண்ணா பல்கலைகழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயக்குமார், இந்த இரு பிரிவுகளுக்கு 35 ஆண்டுகளாக நிதி ஒதுக்குவதுடன், மாணவர் சேர்க்கைக்கான பட்டியலையும் தேர்ந்தெடுத்து மத்திய அரசு அனுப்பும். அதன்படி பல்கலைகழகம்  மாணவர் சேர்க்கைக்கான அனுமதி அளிக்கப்படுகிறது.இந்த ஆண்டு பல்கலைகழகத்தை சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதால், எந்த இட ஒதுக்கீடு என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பாடப்பிரிவுகளை நிறுத்தப்பட்டுள்ளது என்று விளக்கம்  அளித்தார். தமிழக அரசு தரப்பில் மனோகரன் ஆஜராகி வழக்கு குறித்து முழுமையாக விளக்கம் பெற்று தெரிவிக்க 2  நாட்கள் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால் பல்கலைகழகமே இட ஒதுக்கீடு முறை குறித்து முடிவெடுக்க வேண்டிதானே. படிப்பை வழங்குவதைவிட பணத்திற்காக படிப்பை ரத்து செய்தது அண்ணா  பல்கலைகழகம் போன்ற கல்வி நிறுவனத்திற்கு ஏற்புடையதா? இது பல்கலை கழகத்திற்கு அழகல்ல. துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் பேசி நல்ல முடிவெடுங்கள்.  நிதி உதவி தேவை என்றால் தமிழக அரசை நாடுங்கள். உயர் கல்வி துறை செயலாளரிடம் கலந்துபேசி அரசு நல்ல முடிவெடுக்க வேண்டும். பணத்திற்காக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. நல்ல தீர்வை கண்டறிந்து தெரிவிக்க  வேண்டும். மருத்துவப்படிப்பில் 69 சதவீதம் நடைமுறை கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் இந்த எம்.டெக். படிப்பில் மட்டும் ஏன் குழப்பம்?

மத்திய அரசு சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும், பல்கலைகழக சேர்க்கை என்றால் ஒரு வகையாகவும் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியுமா?, எம்.டெக். படிப்பில் ஏற்கனவே உள்ள நடைமுறையில் ஒதுக்கீடு வழங்குவதா அல்லது இந்த  ஆண்டு மாணவர் சேர்க்கையையும் தாங்களே நடத்துவதா என மத்திய அரசே நடத்துவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கை பிப்ரவரி 8ம் தேதி தள்ளிவைத்த நீதிபதி, மத்திய மாநில அரசுகள்  மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அளிக்கும் விளக்கத்தை  கேட்டபிறகு, அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



Tags : Cancellation ,Anna University ,High Court , Cancellation of 2 courses in M.Tech courses: Cancel study for money? High Court condemns Anna University
× RELATED பதிவாளர் நியமனத்தை எதிர்த்த வழக்கு...