×

கொரோனா ஊரடங்கு தளர்வால் 10 மாதங்களுக்கு பின் ஐகோர்ட்டில் வழக்குகள் நேரடி விசாரணை: ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் அறிவிப்பு

சென்னை: கொரோனா பிரச்னையால் 10 மாத இடைவெளிக்கு பிறகு பிப்ரவரி 8ம் தேதி முதல் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நேரடி விசாரணை  தொடங்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு  வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை ஆகியவற்றில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை  பின்பற்றி பிப்ரவரி 8ம் தேதி முதல் வழக்குகளின் விசாரணையை நேரடியாக மேற்கொள்வது என நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் விரும்பினால் காணொலி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம். நேரடி வழக்கு  விசாரணையை பொறுத்தவரை இறுதி விசாரணை வழக்குகள் மட்டுமே காலை மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும். மற்ற வழக்குகள் காணொலி மூலமாக மட்டுமே நடைபெறும்.

பதிவுத்துறை பிரிவுகளில் ஒரு நேரத்தில் ஐந்து வக்கீல்கள் அல்லது குமாஸ்தாக்கள் அல்லது மனுதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நீதிமன்ற அறைகளை பொறுத்தவரை ஒரு மணி நேரத்திற்கு 5 வழக்குகள் மட்டுமே விசாரிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு இரு வக்கீல்கள் வீதம் அறையின் பரப்பளவை பொறுத்து 6 முதல் 10 வக்கீல்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வக்கீல்கள் பதிவுத்துறை ஒதுக்கியுள்ள இடத்தில் காத்திருக்க வேண்டும். வழக்கு முடிந்தபின் வராண்டாவில் நிற்காமல் வெளியேறிவிட வேண்டும். வக்கீல்கள் அறைகளை பொறுத்தவரை  சுத்தப்படுத்தவும், கிருமி நாசினி தெளிக்கவும்  அறைகள் திறக்கப்பட்டு உடனடியாக மூடப்படும். அறைகளை திறப்பது தொடர்பாக பிப்ரவரி இறுதியில் முடிவெடுக்கப்படும். உணவகங்களை பொறுத்தவரை அரசு வகுத்துள்ள விதிகளின்படி திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : hearing ,corona curfew ,Registrar General ,iCourt , Corona Curfew relaxed for 10 months after the direct investigation of cases in High Court: High Court Registrar General Announcement
× RELATED தூத்துக்குடியில் நாளை திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்