×

நாம் சொல்வதை கேட்டு ஆளும்கட்சி செயல்படுவதால் திமுக ஆட்சி பொறுப்பில்தான் இருக்கிறது என்று அர்த்தம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆளும்கட்சி நாம் சொல்வதை கேட்டு செயல்படுகிறது என்பதால் தான், திமுக ஆட்சி பொறுப்பில்தான் இருக்கிறது என்று பேசினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.  திமுக தீர்மானக்குழு உறுப்பினர் கவிஞர் தமிழ்தாசன்- கவுசல்யா தம்பதியரின் மகள் டாக்டர் கோமல், இளங்கோவன்- சவுந்திரநாயகி தம்பதியரின் மகன் டாக்டர் தணிகை அரசு ஆகியோரின் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது.  திருமணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:  
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தை ஜனவரி 25ம் தேதி தான் நடத்த வேண்டும். ஆனால் ஜனவரி 25ம்தேதி பேசாமல் நேற்றைக்கு திருவொற்றியூர் பகுதியில் நடத்திப் பேசி இருக்கிறார்கள்.துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், கிராமசபைக் கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் நடத்திக் கொண்டிருக்கிறார். கிராமசபைக் கூட்டத்தை அரசாங்கம் தான் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அரசாங்கம் நடத்தவில்லை  என்பதற்காகத்தான் நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். அது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

நியாயமாக கிராமசபைக் கூட்டத்தை அரசின் சார்பில் தான் நடத்த வேண்டும். நான் அதை மறுக்கவில்லை. ஆண்டுக்கு 4 முறை நடத்த வேண்டும். காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம், உழைப்பாளர் தினம் அன்று நடத்த வேண்டும்.  இதுதான் மரபு. இந்த ஆட்சியில் இந்த 10 ஆண்டு காலத்தில் அந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. அதனால் தான் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டத்தில் நடத்துவோம் என்று அறிவித்தவுடன் அதை நடத்தக் கூடாது என்று தடை  போட்டார்கள். என்ன தடை போட்டாலும் அந்த தடை பற்றி திமுக என்றைக்கும் கவலைப்படாது என்பதைச் சொல்லி, அதே நேரத்தில் அதை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்பதற்காக ‘மக்கள் கிராம சபை’ என்று பெயரை மாற்றி, அதைத் தமிழ்நாடு  முழுவதும் நடத்தியிருக்கிறோம்.

திமுக 10 ஆண்டுக் காலமாக எதிர்க்கட்சியாகத் தான் இருக்கிறது. நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் விரைவில் நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். ஆனால் நாம் ஆட்சிக்கு வந்துவிட்டோம். நாம் தான்  ஆட்சியில் இருக்கிறோம். ஏன் என்றால் நாம் சொல்வது தான் நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா வரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் நாம் சொன்னோம். அதற்குப் பிறகு இப்போது என்ன நிலைமை என்பது உங்களுக்குத் தெரியும். அதே போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் மக்களுக்கு  5000 ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என்று அறிக்கை விட்டோம். 1000 ரூபாய் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். நாம் சொன்னதை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல நான்கைந்து நாட்களாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அப்போது கூட்டத்தில் கூட்டத்தில் கலந்து  கொண்ட ஒரு ஆசிரியர் ஒரு கோரிக்கை வைத்தார்.

எங்கள் மீது பொய் வழக்குப் போட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விரைவில் நிச்சயமாக உங்கள் கோரிக்கை  நிறைவேற்றப்படும் என்று மாலை 4 மணிக்கு சொன்னேன். மாலை 6 மணிக்கு அரசு உத்தரவு போட்டு விட்டது. அதேபோல ஆரணி தொகுதியில் எழிலரசி என்ற ஒரு சகோதரி, சிலிண்டர் வெடித்து, அவர் வீடு எரிந்து அவரது தாயார் அந்த தீ விபத்தில் இறந்துவிட்டதாகச் சொன்னார். அந்தச் சகோதரி பேசும்போது, ‘ஆதரவற்று இருக்கிறேன். விபத்து நடந்து 2  மாதங்கள் ஆகிறது. நிதி வரும் நிதி வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னார். நிதி வரவில்லை, பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களுக்குள் செய்து கொடுக்க வேண்டும் என்று சொன்னார். ‘உங்கள் பிரச்சினைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும்’ என்று அப்போது சொன்னேன். இது மாலை 5 மணிக்கு நடந்தது. இரவு 8 மணிக்கு அந்த  பெண்ணின் வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாயை அரசு செலுத்தி விட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆட்சியில் இல்லாமலேயே இவ்வளவு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னென்ன பணிகள் செய்வோம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்  பேசினார்.

மூன்று மாதத்தில் அண்ணாவின் ஆட்சி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு: தந்தை பெரியாரின் தனயன் - முத்தமிழறிஞர் கலைஞரின், தாய்த்தமிழ்நாட்டின் அண்ணன் - பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள் இன்று அவரை மறந்தால் அல்லவா  நினைப்பதற்கு. மொழி - இனம் - நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம், உறுதியேற்கிறோம் இன்று.இவ்வாறு முகநூலில் கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிக்கு புதிய ஸ்கூட்டி
சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி பி.விநாயகமூர்த்தி. இவரது குடிசை வீடு, மின்கசிவின் காரணமாக எரிந்து சாம்பலானது. இதில் அவரின் ஸ்கூட்டி  உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்துவிட்டன. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், மாற்றுத்திறனாளியான தான் பயன்படுத்த ஸ்கூட்டி வாங்கி தருமாறு கோரிக்கை வைத்தார். அவர் கோரிக்கை வைத்த 2வது நாளில் அவரது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக புதிய  ஸ்கூட்டி வாகனம் வழங்குவதாக கூறியதை தொடர்ந்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஸ்கூட்டியை விநாயகமூர்த்திக்கு வழங்கினார். அப்போது, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, டிசம்பர்-3  இயக்கத்தின் மாநில தலைவர் பேராசிரியர் டி.எம்.என்.தீபக், கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் ஏ.நாகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மகேஷ்குமார், வட்டச் செயலாளர் கே.வி.சண்முகம் உடனிருந்தனர்.

Tags : party ,DMK ,MK Stalin , Just because the ruling party listens to what we say means that the DMK regime is in charge: MK Stalin's speech
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...