அள்ளி வீசிய வாக்குறுதி ஆத்தோட போயிருச்சு...! - பரமக்குடி தொகுதி எம்எல்ஏ, சதன் பிரபாகர்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனி தொகுதியில் கடந்த 2016ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் முத்தையா வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின் இவர் டிடிவி பக்கம் சென்றதால், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.  இந்த தேர்தலில் ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் சதன் பிரபாகர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  தேர்தல் பிரசாரத்தின்போது வைகை ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள சர்வீஸ் சாலைக்கு மின்விளக்கு வசதி, பாதாள சாக்கடை திட்டம், நெசவாளர்களுக்கு பாவு விரிக்க உதவும் ‘அல்லுக்கூடம்’, காட்டுபரமக்குடி - மஞ்சள்பட்டிணம் இணைக்கும்   வைகை ஆற்றின் குறுக்கே பாலம், பரமக்குடியில் மகளிர் கல்லூரி, பார்த்திபனூரிலிருந்து கமுதியை இணைக்கும் புறவழிச்சாலை திட்டத்தை கொண்டு வருவேன் என வாக்குறுதிகளை வாரி இறைத்தார். இது எதையுமே இதுவரை அவர்  நிறைவேற்றவில்லை.

 பரமக்குடி அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவை மேம்படுத்தும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. சத்திரக்குடியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் திட்டமும் நிறைவேறவில்லை. ‘‘தொடர்ந்து  அதிமுகவினருக்கு வாக்களித்து வெற்று வாக்குறுதிகளைத்தான் அள்ளி வீசுறாங்க... எல்லாமே ஆத்துல போட்ட மாதிரி ஆயிருச்சு... அடுத்த முறை அதிமுகவை ஜெயிக்க விட மாட்டோம்’’ என பரமக்குடி தொகுதி முழுவதும் பரவலாக பேச்சு  எழுகிறது.

கிராமப்புற சாலைகள் குடிநீர் வசதி அமைப்பு

பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் கூறும்போது, ‘‘பதவியேற்று  குறுகிய காலங்களில், கொரோனாவால் 11 மாதங்களாக  அனைத்து திட்டங்களும் செயல்படுத்த முடியாத  நிலை இருந்தது.  மீதமுள்ள குறுகிய காலத்தில் கொரோனா நிதி ரூ.1.25  கோடி போக மீதமுள்ள ரூ.4.75 கோடி சட்டமன்ற நிதியிலிருந்து முழுமையாக ஒவ்வொரு ஒன்றியங்களுக்கு நிதி பிரிக்கப்பட்டு செலவிடப்பட்டது. போர்வெல், கான்கிரீட் சாலை, தார் சாலை, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.  குடிநீர்  ஆதாரம் மேம்படுத்திட செவ்வூர் சூரியூர் ஆகிய பகுதிகளில் வைகை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பு அணைகள் ரூ.17 கோடி செலவில்  அமைக்கும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசிடம் சிறப்பு நிதியாக ரூ.16 கோடி  பெற்று  பரமக்குடி நகர் பகுதியில்  ரூ.11.50 கோடி செலவில் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நயினார்கோவில் ஒன்றியத்தில் ரூ.4.50 கோடி செலவில் கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் இல்லை

திமுக வேட்பாளராக போட்டியிட்ட சண் சம்பத்குமார் கூறும்போது, ‘‘பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என கடந்த 10 வருடங்களாக அதிமுக எம்எல்ஏக்கள் சொல்கின்றனர். இதுவரையிலும் கொண்டு வரப்படவில்லை. வாறுகால்  அமைக்கப்படாததால் அனைத்து வார்டு சாலைகளிலும் கழிவுநீர் தேங்கி, சுகாதாரமற்ற நிலை தற்போது வரை தொடர்கிறது. வைகை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. எமனேஸ்வரம்- காக்கா  தோப்பு பாலம்  அமைக்கும் பணியை நடைமுறைப்படுத்தவில்லை. மகளிர் கல்லூரி கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் திட்டங்களுக்காக முக்கியத்துவம் கொடுக்காமல், ஜெயலலிதா கோயில் திறப்புக்கு  பாதயாத்திரை செல்லும் எம்எல்ஏ, பொதுமக்கள் பிரச்னைக்கு எப்போதுமே குரல் கொடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பரமக்குடியில் நகர்ப்புற கட்டமைப்பு உருவாக்கி  சுகாதாரமுள்ள  பரமக்குடி  உருவாகும்’’ என்றார்.

Related Stories:

>