×

சுட்டெரிக்கும் வெயிலில் ‘சுடச்சுட’ பிரசாரம்

தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலும் சட்டமன்ற தேர்தல் கோடை மாதத்தில் அமைகிறது. கந்தக பூமி என அழைக்கப்படும் விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஓட்டுக்கேட்டு வீதி வீதியாக உலா வரும் வேட்பாளர்கள்,  தொண்டர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் ‘சுடச்சுட’ பிரசாரம் செய்து களைத்துப் போவார்கள். சாதாரணமாக குழுவாக சேரும்போது, ‘‘எல்லோருக்கும் சூடா டீ சொல்லுப்பா...’’ என்பார்கள். ஏற்கனவே வெந்து தணியும்போது, இதுல எங்கே போய் சூடா  உள்ளே இறக்க முடியும். எனவே, ஜில்லுனு குளிர்பானங்களைத்தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். இதனால் வேட்பாளர்களின் பட்ஜெட் மேலும் எகிறும் வாய்ப்புள்ளது. இதற்காக சிலர் தங்களுக்கான சாவடிகளில் பானகம், நீர்மோர்களை  பெரிய டிரம்களில் வைக்க திட்டமிட்டுள்ளனர்.கடந்த தேர்தல்களில் காலை 10 மணிக்கு முன்பும், மாலை 4 மணிக்கு பின்புமென வேட்பாளர்கள், முக்கிய பேச்சாளர்களின் பிரசாரங்கள் நடந்தன.

நடப்பாண்டிற்கான அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி துவங்குகிறது. பிரசாரம், ஓட்டுப்பதிவு, ஓட்டு  எண்ணிக்கை வரையிலும் வெயிலின் உக்கிரம் கடுமையாக இருக்கும். மே 29ல் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. அதுவரை, இந்த ‘கத்தரி வெயில்’ தேர்தல் பணிகளில் களம் கொள்ளும் அத்தனை பேரையும், கலங்கடித்து விடும்.  இந்த கோடை மற்றும் அக்னி நட்சத்திர நாட்களில்  வேட்பாளர்களுடன், தொண்டர்களும் வெயிலின் கடுமையை தாங்கியாக வேண்டும். பருவநிலை மாற்றங்களால் இந்த ஆண்டு வெயிலின் கடுமை அதிகமாகவே இருக்கும் என்ற வானிலை  அறிவிப்புகள் வேறு மிரட்டுகின்றன. அதனால் என்ன? மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தலுக்காக, ‘மண்டை காய்ந்தாலும்’ பரவாயில்லையென களமிறங்க தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

Tags : campaign , ‘Bake’ campaign in the scorching sun
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...