×

விவசாயிகள் மீது சதி குற்றச்சாட்டு: உரிய நீதி கிடைப்பதற்கு கெஜ்ரிவால் ஆதரவு: விவசாய சங்க கூட்டமைப்பு தகவல்

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள் மீது குற்ற சதி சுமத்தப்பபடுவது குறித்து வேதனை தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உரிய நீதி கிடைக்க முழு ஆதரவு அளிப்பதாகவும் உறுதி தெரிவித்தார் என விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் இரண்டு மாதமாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த விவசாய சங்கங்களுக்கு கூட்டமைப்பாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா செயல்படுகிறது. மோர்ச்சா சார்பில் குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது கலவரம் உருவாகி போலீசாரும், விவசாயிகளும் காயமடைந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர். இந்த சூழலில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா உறுப்பினர்கள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவல், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் எம்எல்ஏ ராகவ் சதா ஆகியோரை நேற்று சந்தித்தனர். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூறியிருப்பதாவது: விவசாயிகளில் பலரும் கைது செய்யப்பட்டும், காணாமலும் போயுள்ளது குறித்தும், விவசாயிகளின் வேறு பல பிரச்னைகள் குறித்தும் டெல்லி மாநில முதல்வருடன் விரிவாக ஆலோசனை நடத்தினோம்.

டிராக்டர் பேரணியில் உருவான வன்முறை தொடர்பாக இதுவரை 115 விவசாயிகளை கைது செய்து திகார் உள்ளிட்ட சிறைகளில் போலீசார் அடைத்துள்ளதாக அரசு எங்களுக்கு தெரிவித்ததை முதல்வருக்கு எடுத்துரைத்தோம். எந்த சிறையில் எத்தனை விவசாயிகள் உள்ளனர் எனும் விவரத்தை முதல்வர் எங்களுக்கு தெளிவாக்கி உள்ளார். போலீசாரால் விவசாயிகள் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளனரா என கண்டறிய, மருத்துவ குழு அமைத்து அந்த விவசாயிகளுக்கு மருத்துவ சோதனை நடத்த வலியுறுத்தினோம்.

சிறையில் உள்ள விவசாயிகளுக்கு உதவவும், காணாமல் போன விவசாயிகளை தேடவும் நாங்கள் அமைத்துள்ள வக்கீல்கள் அப்போது விவசாயிகள் மீது குற்ற சதி வீணாக சுமத்தப்பட்டு உள்ளதாக முதல்வரிடம் முறையிட்டனர். அதையடுத்து, இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க எங்களுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிப்பதாக உறுதி அளித்தார். அது மட்டுமன்றி விவகாரத்தை ஆளுநர் மூலமாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். உரிய நீதித்துறை விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். விவசாயிகளில் 29 இளைஞர்களை காணவில்லை எனக் கூறி, அவர்களை தேட உதவும்படி கோரியுள்ளோம். மேலும், போலீசார் பறிமுதல் செய்துள்ள டிராக்டர்கள் உள்ளிட்ட விவசாயிகளின் வாகனங்களை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம். கைதாகி உள்ள விவசாயிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Kejriwal ,Agrarian Union , Farmers, accused, Kejriwal, support
× RELATED டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால்...