×

சுங்கக்கட்டணம் செலுத்தாததால் நாங்குநேரி டோல்கேட்டில் அரசு பஸ்கள் தடுத்து நிறுத்தம்: பயணிகள் கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு

நாங்குநேரி: நாங்குநேரியில் முறையாக சுங்கக் கட்டணம் செலுத்தாத அரசு பஸ்கள் தடுத்து நிறுத்தப்படுவதால் பயணிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கொரானோ ஊரடங்குத் தளர்வுக்குப் பின் அரசு பஸ் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில்-நெல்லை மார்க்கத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு நாங்குநேரி சுங்கச்சாவடியில் மாதாந்திர கட்டணம் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி இந்த தடத்தில் இயக்கப்படும் பல அரசு பஸ்களுக்கு மாதாந்திர கட்டணம் செலுத்தப்படுகிறது. கட்டணம் செலுத்தப்பட்ட பஸ்களின் பட்டியலை வைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் தினமும் கண்காணித்து அரசு பஸ்களை அனுமதித்து வருகின்றனர்.  இந்நிலையில் சுங்கக் கட்டணம் செலுத்தாத அரசு பஸ்களும் இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்து சுங்கச்சாவடி அதிகாரிகள் கட்டணத்தை செலுத்திவிட்டு செல்லுமாறு கண்டக்டர்களை அறிவுறுத்தி, பஸ்களை அங்கேயே தடுத்து நிறுத்தி விடுகின்றனர். அதன்பின் கண்டக்டர்கள் இதுகுறித்து பணிமனை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து அவர்களின் ஒப்புதலைப் பெற்றுபின் சுங்க கட்டணம் செலுத்துகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பிரச்னையில் சிக்கும் பல அரசு பஸ்கள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சுங்கச்சாவடியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். நேற்று மாலை (2ம்தேதி) நாகர்கோவிலிலிருந்து திண்டுக்கல்லுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சுக்கு சுங்கக்கட்டணம் செலுத்தாததால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கண்டக்டர்களிடமும், சுங்கச்சாவடி ஊழியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முயற்சித்தனர். இதனால் ஏராளமான வாகனங்கள் சுங்கச்சாவடியில் சிக்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த பஸ்சின் கண்டக்டர் உயரதிகாரிகளிடம் பேசி கட்டணத்தைச் செலுத்திய பின்னரே பஸ் விடுவிக்கப்பட்டது. எனவே அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்களுக்கு முறையாக சுங்கக்கட்டணம் செலுத்தி இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.



Tags : Nanguneri tollgate ,Passengers , Government buses stopped at Nanguneri tollgate due to non-payment of customs duty
× RELATED டெல்லி – வாரணாசி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்