நாகையில் பயங்கர தீ விபத்து: 7 கூரை வீடு எரிந்து சாம்பல்: ரூ.10 லட்சம் பொருட்கள் நாசம்

நாகை: நாகையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. நாகை அண்ணா நகர் வைக்கோல்கார தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார் (35). ஆட்டோ டிரைவர். இவரது வீடு கூரை வீடு. இவரது வீட்டுக்கு அருகில் வரிசையாக 6 கூரை வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வசிக்கும் அனைவரும் கூலி தொழிலாளர்கள். அனைவரும் இன்று காலை வேலைக்கு சென்று விட்டனர். இதனால் 7 வீட்டிலும் யாரும் இல்லை. 3வதாக உள்ள லட்சுமி என்பவரின் வீட்டில் கல்லூரி மாணவியான அவரது மகள் கவிதா மட்டும் இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் தினேஷ்குமார் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு கவிதா, வெளியே ஓடி வந்து பார்த்தார். அப்போது தினேஷ் குமார் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இந்த தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் நாகை தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 7 வீடுகளும் எரிந்து சாம்பல் ஆனது. வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து சாம்பல் ஆனது. 7 வீடுகளிலும் சேத மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. இதுபற்றி நாகை போலீசார் வழக்குப்பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>