×

விழிப்புணர்வு இல்லாமல் முடங்கிய வீடுகளுக்கான சோலார் திட்டம்

வேலூர்: வீடுகளில் சோலார் மின்சார திட்டம் அமைக்க மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தி துறை, தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமை மானியம் வழங்குகிறது. ஒரு கிலோ வாட் சோலார் மின்சக்தி அமைக்க, மத்திய அரசு 30 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம் மானியம் வழங்குகிறது. ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைக்க விரும்பினால் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதி நடை முறைக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தின் மூலம் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும். ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த மின்சாரத்தை கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சார பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை ‘கிரிட்’ மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் ரூ.1 லட்சம் செலவு செய்து தனது வீட்டுக்கு பேட்டரி இல்லாமல் ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தால் தற்போது மத்திய அரசு மானியமாக ரூ.30 ஆயிரம் கிடைக்கும். இத்துடன் தமிழக அரசு மானியமான ரூ.20 ஆயிரமும் கிடைத்தால், மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக கிடைக்கும். மீதமுள்ள ரூ.50 ஆயிரம் செலவு செய்தால் ஒருவர் தனது வீட்டில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

வீடுகளில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்தால் பொதுமக்களுக்கு கணிசமான பணம் மிச்சமாகும். மேலும் சோலார் மின் தகடு அமைத்துள்ள இடங்களில், மின்வாரியம் மூலம் வழங்கப்படும், ‘நெட் மீட்டர்’ மூலம் மற்ற வீடுகளுக்கும், மின்சப்ளை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே தங்களின் வீடுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியத்தின் மூலம் சோலார் கருவிகள் அமைத்துள்ளனர்.

இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாததால் முடங்கி உள்ளது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் எப்போதும் சூரிய ஒளி கிடைக்கும் பகுதியாக திகழ்ந்து வருகிறது. ஆனால் இந்த திட்டம் என்பது வெறும் வார்த்தைகளாக மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : homes , Solar project
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை