கேரள தங்கல் கடத்தல் வழக்கு: மேலும் பல அமைச்சர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள்: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேச்சு.!!!

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கு உலகெங்கிலும் உள்ள கேரள மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான  நிலையத்தில் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை, பிஎஸ் சரித், ஸ்வப்னா சுரேஷ், பைசல் பரீத், சந்தீப் நாயர் மற்றும் பலர் மீது கடந்த அண்டு  ஜூலை மாதம் 10-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.

தொடர்ந்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப்பை ஜூலை 11-ம் தேதி என்.ஐ.ஏ. கைது செய்தது. தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்திய சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும், வழக்கில் கைதான ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கர் 98 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, தமிழக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், 2 நாள் பயணமாக கேரள மாநிலம் சென்றுள்ள பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி.நட்டா, திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய போது, முதல்வர் அலுவலகத்தின் தங்கக் கடத்தல் வழக்கு கேரளா மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து மலையாள மக்களுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர்  பினராயி விஜயன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். விசாரணை முடிவிற்கு வரும்போது மேலும் பல அமைச்சர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்று கூறினார்.

Related Stories: