×

டிராக்டர் பேரணியில் விவசாயி இறந்த விவகாரத்தில் தன் மிதான வழக்கை ரத்து செய்யக்கோரி சசிதரூர் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: டெல்லியில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது போலீசார் பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. அதில், விவசாயி ஒருவர் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்தார். ஆனால், போலீசார் சுட்டதில் தான் அவர் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் மற்றும் பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய், ஆனந்த் நாத் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவு செய்தனர். ஆனால், பேரணியின் போது டெல்லி போலீசார் ஒரு துப்பாக்கி குண்டைக் கூட சுடவில்லை. டிராக்டர் கவிழ்ந்ததால் அதான் அந்த விவசாயி உயிரிழந்தார் என தெரிவித்து, அதுகுறித்த ஆதாரப்பூர்வ வீடியோவையும் டெல்லி போலீசார் வெளியிட்டனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போதும், இறந்த விவசாயி உடலில் எந்தவித துப்பாக்கி குண்டோ அல்லது அதற்கான காயமோ இல்லை என மருத்துவர்கள் தரப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தவறான செய்தியை வெளியிட்ட எம்.பி., சசிதரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிரினல் பாண்டே, ஜாபர் அஹா, பரேஷ் நாத், ஆனந்த் நாத், வினோத் கே ஜோஷ் ஆகியோர் மீது தேச துரோகம், சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

   இதையடுத்து மேற்கண்ட பிரச்சனை தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படவிருந்த நிலையில், காங்கிரஸ் எம்பி சசிதரூர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரது தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததை அடுத்து தங்கள் மீது டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து, அதில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மனு அடுத்த ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என தெரியவருகிறது.

Tags : Sachitharur ,Supreme Court ,tractor rally ,death , சசிதரூர்
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...