×

நீட் தேர்வு கூடாது.. வேளாண் சட்டங்களை ரத்து செய்க... தேர்வுகளில் தமிழர்களை புறக்கணித்தல் கூடாது : மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா விளாசல்

டெல்லி : குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய மாநிலங்களவை திமுக எம்.பி. திருச்சி சிவா, நீட் தேர்வு, வேளாண் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு கூடாது

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகம் முழுவதுமே எதிர்ப்பு நிலவுகிறது.ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்றாலும் அது குப்பைக்கூடைக்குள் அறியப்படுகிறது.3 மணி நேரமே நடத்தப்படும் நீட் தேர்வை கொண்டு மாணவரின் தகுதியை நிர்ணயிப்பது எப்படி சரியாகும்.நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் ஒப்புதல் தரப்படவில்லை. நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும்.

வேளாண் சட்டம்

வேளாண் சட்டங்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றிய முறை சரியல்ல என்று திருச்சி சிவா சாடினார்.திருச்சி சிவா பேசும் போது குறுக்கிட்டு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்தார்.முறைப்படிதான் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.இதைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று திருச்சி சிவா கோரிக்கை வைத்துள்ளார்.

எல்.ஐ.சி தனியார்மயம்

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யை தனியார்மயமாக்கும் அறிவிப்புக்கு திமுக உறுப்பினர் திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது இந்தியாவை  பாதிக்கப்படாமல் காப்பாற்றியது பொதுத்துறை நிறுவனங்கள் தான் என்றும் ஐ.டி.பி.ஐ., செயில் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டம் சரியல்ல என்றும் தெரிவித்தார்.

இதே போல் 4 தமிழக மீனவர்களை பிடித்து, இலங்கை கடற்படை அடித்துக் கொன்றதற்கு கண்டனம் தெரிவித்த  திருச்சி திமுக எம்.பி. சிவா,அடிக்கடி பாதிக்கப்படுவதால் மீன்பிடி தொழிலை விட்டு விட தமிழக மீனவர்கள் யோசிக்கின்றனர் என்றார். மேலும் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்தது,ரயில்வே, அஞ்சல்துறை மற்றும் என்எல்சி பொறியாளர்கள் தேர்வில் தமிழர்களை புறக்கணிப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும்  திருச்சி சிவா குரல் எழுப்பியுள்ளார்.


Tags : Tamils ,elections ,Trichy Siva Vilasal , திமுக எம்.பி. திருச்சி சிவா
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்