×

கே.வி.குப்பம் காவனூர் ஏரி நிரம்பி வழிந்தும் பயனில்லை விளைநிலங்களாக மாறிய கால்வாய்களால் பாதி வழியில் தேங்கி நிற்கும் ஏரி உபரி நீர்

* ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்
* 20 கிராம விவசாயிகள் கடும் அதிருப்தி

*குரலற்றவர்களின் குரல்

கே.வி.குப்பம் : வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் காவனூர் ஏரி நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் பாதிவழியில் தேங்கி நிற்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், காவனூர் ஏரி நிரம்பி வழிந்தும் பயனில்லை என்று 20 கிராம விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காவனூர் ஏரி 488.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு நீர் ஆதாரமாக கவுண்டன்ய மகாநதி, பாலாறு, அகரம் ஆறு, பத்திரபல்லி ஆறு ஆகிய 4 ஆறுகள் உள்ளன. ஏரி முழு கொள்ளளவை எட்டினால் 4 மதகுகள் கொண்ட ஏரிக்கு 70 ஏக்கர் கொண்ட ஆற்று கால்வாய் மூலம் நீர் வந்து சேரும்.

காவனூர் ஏரி சில மாதங்களுக்கு முன்பு குடிமராமத்து பணியை மேற்கொள்ள  கலெக்டர் சண்முக சுந்தரம் பூமி பூஜைகள் போட்டு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து குடிமராமத்து பணிகள் முழுமையாக நடைபெற்றது. குடிமராமத்து பணிகளால்  ஏரி   முழுமையாக சீரமைக்கப்பட்டு ஏரியின் கரை சுமார் 12 அடி அகலத்தில், உயர்த்தப்பட்டது.

இந்த ஏரி கடந்த 2015 ஆம் ஆண்டு முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டும் நிரம்பி வழிந்தது. அதன்பிறகு சமீபத்தில் பெய்த கன மழையால் பள்ளிகொண்டா பாலாற்றில் இருந்து பசுமாத்தூர் பாண்டியன் கால்வாய் மூலம் வரும்  நீரால் தொடர்ந்து  முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.

இந்த ஏரியில் இருந்து செல்லும் நீரானது பாண்டியன் கால்வாய் வழியாக  காவனூர், பில்லாந்திப்பட்டு, கவசம்பட்டு, முடினாம்பட்டு, வேலம்பட்டு, கீழ்விலாச்சூர், வாழ்வாங்குன்றம், சோழமூர், கொத்தமங்கலம், திருமணி, கரசமங்கலம், தலையாராம்பட்டி, சேனூர், வஞ்சூர், கழிஞ்சூர், சேவூர், திருவலம் ஆகிய கிராமங்களின்   வழியே சென்று மீண்டும் பாலாற்றுக்கு செல்கிறது. இதனால் 50க்கும்  மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.

இந்நிலையில் சில  மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால், ஏரி முழு கொள்ளளவை எட்டியதும் வருவாய் துறையினர், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட  அதிகாரிகள் ஏரியினை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து  அப்பகுதியினர்  ஒன்றாக சேர்ந்து ஏரி நிரம்பியதை கொண்டாடும் விதமாக  பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, மேளதாளத்துடன் கிடாய் வெட்டி திருவிழா போல் கொண்டாடி நீரை வரவேற்றனர்.
ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி வந்தது.

அவ்வாறு உபரிநீர் வெளியேறும் துணை கால்வாய் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே கால்வாய்களையொட்டியுள்ள விவசாயிகள் சிலர் அதனை விளைநிலங்களாக மாற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இப்படி ஒரு சில விவசாயிகளின் சுயநலத்தினால், காவனூர் பகுதியிலேயே அந்த உபரிநீர் பாதி வழியில் தேங்கி நிற்கின்றது.

பல அதிகாரிகள்  ஏரியை நேரில் சென்று பார்வையிட்டனர். ஆயினும் ஆக்கிரமிப்புகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காவனூர் ஏரி நீரை நம்பி பயிரிட்ட காவனூர், சீதாராமப்பேட்டை, பெருமாள்பேட்டை, பில்லாந்திப்பட்டு, கலசம்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், மழைபெய்து, ஏரியில் நீர்வரத்து வந்தும் பயனில்லாமல் அவதிப்பட்டு வருவதாக கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவனூர் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் பாண்டியன் கால்வாய் மற்றும் அதனை சுற்றியுள்ள  ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாயிகளின் நீண்ட நாள்  கோரிக்கை

காவனூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் போது நிரம்பி வழியும் இடத்திலும் பாண்டியன் கால்வாய் இடையே சுமார் 400 மீட்டர் அளவிற்கு 10 அடி அகலத்தில்  தற்போது உள்ள  பாண்டியன் மண்  கால்வாயை சிமெண்ட் கால்வாயாக அமைத்து தர வேண்டும் என்றும், அவ்வாறு அமைத்தால் பாண்டியன் கால்வாய் வழியாக செல்லும் இருபுற விவசாய நிலங்களுக்கும் விவசாயத்திற்கும் நிலத்தடி நீருக்கும் பயன்பெறும். வெட்டுவானம், ஒலகாசி இடையே கல்வெட்டு வழி கால்வாய் அமைக்க வேண்டும்.

அவ்வாறு கல்வெட்டு வழி கால்வாயை வெட்டுவானத்தில் அமைத்தால் சதுப்பேரி, செதுவாலை, இறைவன் காடு உள்ளிட்ட ஏரிகளுக்கும், ஒலகாசியில் கல்வெட்டு கால்வாய் அமைத்தால் நேரடியாக காவனூர் ஏரிக்கு நீர் செல்ல பயன்படும். மேற்கண்ட பாண்டியன் மண் கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றவும் வெட்டுவானம், ஒலகாசி இடையே கல்வெட்டு கால்வாய் வழி அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

Tags : lake ,canals ,farmland , KV Kuppam: Vellore District KV Kuppam Kavanur Lake Irrigation Canals are stagnant halfway due to encroachment.
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு