×

ஆளும் கட்சியினருக்கு மட்டுமே முக்கியத்துவம் நெல் அறுவடை இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதி-கூடுதல் வாடகைக்கு தனியாரை நாடும் அவலம்

ஒரத்தநாடு : தஞ்சை மாவட்டத்தில் ஆளும் கட்சியினருக்கு மட்டுமே அறுவடை இயந்திரம் வழங்கப்படுவதால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால், ஆந்திராவில் இருந்து வந்துள்ள இயந்திரத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்தி அறுவடை செய்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டால் ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்துள்ள அறுவடை இயந்திரத்தால் நெற்பயிர் அறுவடை. ஆளுங்கட்சியினருக்கும் மட்டும் அறுவடை இயந்திரம் வழங்குவதால், விவசாயிகள் வேதனை. தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சுமார் 3.33 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் மாதம் இறுதியில் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு நெற்பயிர்கள் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிவர், புரெவி போன்ற புயல்களும், கடந்த ஜனவரி மாதத்தில் எதிர்பாராத விதமாக பெய்த தொடர் மழையால் 80 சதவீதம் அளவுக்கு நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது.தற்போது விவசாயிகள் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் வேளாண்மை துறை சார்பில் 425 அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். வேளாண்மை துறை சார்பில் வரவழைக்கப்பட்ட அறுவடை இயந்திரங்களை ஆளுங்கட்சியினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மட்டும் வழங்குவதால், அறுவடை இயந்திரம் கிடைக்காத விவசாயிகள் ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்துள்ள அறுவடை இயந்திரங்களை கொண்டு, கூடுதல் வாடகைக்கு அறுவடை செய்கின்றனர்.

தஞ்சை மாவட்ட திட்டை பகுதியில் பிபிடி ரக நெற்கதீர்களை, ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்துள்ள அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம், ஏழை, சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் வரவழைக்கப்பட்ட அறுவடை இயந்திரங்கள் கிடைக்கும் வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நெய்தலுார் விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், 425 அறுவடை இயந்திரம் விவசாயிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அது பற்றி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் கேட்டால், ஆளுங்கட்சியினரும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் சென்று விட்டது என்று கூறுகிறார்கள். மேலும், இயந்திரம் கிடைக்காத பட்சத்தில் அறுவடை இயந்திரம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் பரிந்துரை வேண்டும் என்று அலட்சியமாக பதில் கூறுகிறார்கள்.

தற்போது, நெற்பயிர்கள் சாய்ந்து, பெரும்பாலான பயிர்கள் நாசமாகி வருவதால், இருக்கும் நெற்பயிரை காப்பாற்ற, மாவட்ட நிர்வாகத்தின் பேச்சை நம்பினால் மோசம் போய்விடுவோம் என்று, ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்துள்ள அறுவடை இயந்திரத்தை கொண்டு, எங்களது வயலில் அறுவடை பணியினை தொடங்கியுள்ளோம். ஒரு ஏக்கருக்கு வயலில் உள்ள நெற்கதிர்களை அறுவடை செய்வதற்கு ஒரு மணி நேரம் ஆகும். இதற்காக ரூ.2000 வாடகை வசூலிக்கப்பட்டது. ஆனால் வயல்களில் மழை நீரால் கதிர்கள் சாய்ந்துள்ளதால், ஒரு ஏக்கர் வயலில் அறுவடை செய்வதற்கு சுமார் இரண்டரை மணி நேரம் ஆகின்றது.

எனவே, மாவட்ட நிர்வாகம், தஞ்சை மாவட்டத்தில் அறுவடை செய்யும் பகுதிகளில் அறுவடை இயந்திரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா, ஆளுங்கட்சியினர் தலையீடு உள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : party , Orathanadu: Farmers suffer as harvesting machines are provided only to the ruling party in Tanjore district
× RELATED 7 தொகுதிகளிலும் நாளை மறுநாள்...