×

வீதி வீதியா டார்ச் அடிக்கிறார்கள்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நம்மவர் போட்டியிடுவதாக கூறிக் கொண்டு நெல்லையில் கமல் கட்சியினர் ஓட்டு கேட்டு வருகின்றனர். டார்ச் லைட்டும், துண்டு பிரசுரமுமாய் வீதி, வீதியாக கட்சியினர் திரிந்து வருகின்றனர். நடிகர் கமலஹாசன் கடந்த பாராளுமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக களம் இறங்கி, தேர்தலிலும் போட்டியிட்டார். அவர் உருவாக்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் களம் இறங்க உள்ளது. இந்நிலையில் கட்சி தலைவர் கமல் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி நிர்வாகிகள் கட்சி கொள்கைகள் மற்றும் டார்ச் லைட் சின்னத்தை பிரபலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அதன் விளைவாக நெல்லை மாவட்டத்தில் ஓரிரு தொகுதிகளில் இப்போது கட்சியினர் டார்ச் லைட் சின்னத்தோடு வீதி, வீதியாக உலா வருகின்றனர். நெல்லை தொகுதிக்கான பிரசாரம் டவுன் ரத வீதிகளில் தொடங்கியது. மாநில செயலாளர் பிரேம்நாத் பிரசாரத்தை தொடங்கி வைக்க, மாநில துணை செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் பிரசாரம் தெரு, தெருவாக நடந்தது. வீதி,வீதியாக சென்று டார்ச் லைட் அடித்து கட்சி சின்னத்தை பிரபலப்படுத்தினார். சில இடங்களில் பொதுமக்கள் நெல்லையில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த கட்சியினர் ‘இப்போதைக்கு 234 தொகுதிகளிலும் நம்மவர் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே வேட்பாளரை தெரிவிப்போம்’ என்றனர். உலக வாழ்க்கையை ரஜினி எட்டு, எட்டாக பிரித்த மாதிரி, கமல் தன் கட்சிக்கான செயல்திட்டங்களை ஏழு, ஏழாக பிரித்துள்ளார். பொருளாதார புத்தெழுச்சிக்கான 7 செயல் திட்டங்கள், சுற்றுச்சூழல் குறித்த 7 செயல் திட்டங்கள், தொழில்துறைக்கான 7 திட்டங்களை கட்சியினர் துண்டு பிரசுரங்களாக வாக்காளர்களிடம் வழங்கி வருகின்றனர்.

Tags : The street lights the torch
× RELATED சொல்லிட்டாங்க…