ஊழல் புகாரில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பேரவை கூட்டத்தொடர் முழுவதும் திமுக புறக்கணிப்பு: வெளிநடப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சட்டசபை கூட்டத்தொடர் முழுவதையும் திமுக புறக்கணிக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பு நான் எழுந்து பேசுவதற்கு முயற்சித்தேன். ஆனால் ஆளுநர் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. அவர் பேசும் போது, மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். அதனால் தமிழகம் வளம் பெறும் என்று ஒரு கருத்தை பதிவு செய்தார்.

ஆனால், மத்திய அரசின் பட்ஜெட் வெளியிடப்பட்ட பிறகு, நான் என்னுடைய கருத்தைத் திமுகவின் சார்பில் எடுத்துச் சொன்னபோது, இது தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் ‘லாலிபாப்’ என்று விமர்சனம் செய்திருந்தேன். அதில், இதே மத்திய அரசு 2015ம் ஆண்டு பட்ஜெட்டை வெளியிட்டபோது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது 2015, அடிக்கல் நாட்டியது 2019, இப்போது 2021, இதுவரையில் அந்தப் பகுதியில் ஒரு செங்கல்லைக் கூட அவர்கள் எடுத்து வைக்கவில்லை. இதுதான் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களின் லட்சணம். அதனால்தான் ‘லாலிபாப்’ என்று இந்த பட்ஜெட்டை நான் விமர்சனம் செய்தேன்.

பெட்ரோல்-டீசல் கேஸ் விலையை உயர்த்தியுள்ளார்கள். இதனால் விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு-தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த பட்ஜெட் போடப்படவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக மத்திய அரசு இந்த பட்ஜெட்டை போட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆளுநர் பேசியதில், எனக்குப் பிடித்தது-உண்மையானது என்னவென்றால், ‘இதுதான் கடைசி பட்ஜெட்’ என்று சொன்னார். அதுதான் உண்மை. அதனை உள்ளபடியே நாங்கள் வரவேற்கிறோம். எனவே இந்த ஆளுநர் உரையைப் பொறுத்தவரையில் திமுகவின் சார்பில் புறக்கணிப்பதாக முடிவு செய்திருக்கிறோம்.

அதற்குக் காரணம் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி ஆளுநரைச் சந்தித்து இந்த அதிமுக அரசின் மீது-முதல்வர் மீது-துணை முதல்வர் மீது-அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் புகார்களை பொத்தாம் பொதுவாக இல்லாமல், ஆதாரங்களைத் திரட்டி, ஏற்கனவே நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் வழக்குகளையொட்டி ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறோம். இதுவரையில் ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆளுநரைப் பொறுத்தவரையில் முதல்வருக்கு-அமைச்சர்களுக்குப் பக்கபலமாக - ஊழலுக்குத் துணை நிற்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.  

அதுமட்டுமின்றி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையைத் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளுக்கு முன்னால் அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரையில் அதற்கும் எந்தவிதமான முறையான பதிலும் இல்லை. விடுதலை செய்வதற்கான சூழலையும் ஆளுநர் உருவாக்கவில்லை. எனவே அதையும் கண்டித்து நாங்கள் ஆளுநர் உரையை மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து கூட்டத்தொடர் முழுமையையும் புறக்கணிப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

காரணம், ஊழல் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. முதல்வர்-துணை முதல்வர்-அமைச்சர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் பணத்தைக் கூட்டிப் பார்த்தீர்களென்றால் ஒரு ஆண்டு பட்ஜெட்டே போட முடியும். அந்த அளவிற்கு அவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இதை எடுத்துச் சொல்வதற்குச் சட்டமன்றத்தில் நிச்சயமாக எங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அதனால் நாங்கள் மக்கள் மன்றத்திற்குச் சென்று விட்டோம். மக்கள் மன்றத்தில் இதனை ஆதாரங்களோடு சொல்வதற்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அதனால் இங்கிருந்து பேசுவதில் எந்த பயனும் இல்லை. ஏன் என்றால் பேசுவதற்கு நிச்சயம் அனுமதிக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு: பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் நடைபெறுவதாக கூறியிருக்கிறார்கள். அதையும் புறக்கணிக்கப் போகிறீர்களா? அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வோம். இதற்கு முன்பாக ஆளுநரைச் சந்தித்து ஏழு பேர் விடுதலை தொடர்பாக அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள் என்று சொல்கிறார்கள். அதற்குப் பின்பும் எந்த நடவடிக்கையும் இல்லாமல், ஆளுநர் உரை நிகழ்த்தும் போது, அரசு எப்படியாக இந்த நிகழ்வை எடுத்துக் கொள்ளும்? அதனால் தான் நாங்கள் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். ஆளுநர் அதைப்பற்றிக் கவலைப்படவே இல்லை. அமைச்சர்கள் மட்டுமல்ல, நாங்களும் சொல்லியிருந்தோம். அவர்கள் சொன்னார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் மனுக்கள் கொடுத்திருக்கிறோம். அவர் நடவடிக்கை ஏதும் எடுக்காத காரணத்தினால் தான் நாங்கள் புறக்கணிக்கிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

Related Stories:

>