×

காமராஜர் துறைமுக கழிவுகளால் மாசடையும் ஆறு எண்ணூர் முகத்துவாரத்தை தூர்வாருவதில் அலட்சியம்: மீன் இனங்கள் அழிந்து வரும் அவலம்; மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவார பகுதி பல ஆண்டாக தூர்வாரப்படாததால் மணல் திட்டுக்களால் தூர்ந்துள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல படகுகளை இயக்க முடியாத நிலை உள்ளதுடன், விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட  எண்ணூரில் நெட்டுகுப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், காட்டு குப்பம், சிவன் படை வீதி போன்ற மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் எண்ணூர் முகத்துவார ஆற்றில் மீன், இறால், நண்டு போன்றவைகளை பிடித்து வருகின்றனர். மேலும், முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன் பிடிக்க பைபர் படகு மூலம் செல்கின்றனர்.

இந்நிலையில், காமராஜர்  துறைமுக பயன்பாட்டிற்காக அப்பகுதியை ஒட்டி கடலை ஆழப்படுத்துவதால் அலையில்  மண் அடித்து வரப்பட்டு முகத்துவார ஆறும், கடலும் சந்திக்கும் இடத்தில் குவிந்துள்ளது. இதனால், அப்பகுதியில் படகுகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வேகமாக வரும் அலையில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இதனால் பல  மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்த முகத்துவார ஆற்றை ஆழப்படுத்தி மணல் மேடுகளை அப்புறப்படுத்தி, அகலப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் பலமுறை வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரிகளுக்கும், காமராஜர் துறைமுக அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சிரமத்துடன் மீனவர்கள் படகை இயக்குவதோடு, கடலுக்கு சென்று மீன்பிடித்து இரவு நேரங்களில் திரும்பி வருபவர்கள் பீதியுடன் வரும் நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் முகத்துவாரம் முற்றிலும் அடைபடும் அவலம் உள்ளது. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து இப்பகுதி மீனவர்கள் கூறுகையில்   “முகத்துவார ஆற்றின் ஆழம் 9 மீட்டரிலிருந்து படிப்படியாக ஒரு மீட்டராக குறைந்து விட்டது. இதனால் மீன்பிடிக்க பைபர் படகை இயக்க முடியாத நிலை உள்ளது.

மேலும், வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து மறுசுழற்சி செய்யப்படாமல் சுடுநீர் மற்றும் சாம்பலை அப்படியே முகத்துவாரத்தில் விடுவதால் முகத்துவார ஆறு மாசடைந்து மீன் இனம் அழிந்து வருவதோடு, மீனவர்களுக்கு மூச்சுத்திணறல், காசநோய் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதே இல்லை. இதே நிலை தொடர்ந்தால், முகத்துவாரத்தில் மீன் இனங்கள் அழித்து அதை நம்பி வாழும் மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இந்த முகத்துவார ஆற்றை தூர்வாரி ஆலப்படுத்த வேண்டும், காமராஜர் துறைமுகத்தில் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2 மாதங்களுக்கு முன்பு சுமார் 200 படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகு மூலம் கடலில் சென்று காமராஜர் துறைமுகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே முகத்துவார ஆற்றில் சுடுநீர் விடுவதை தடுக்கவும், ஆற்றை ஆழப்படுத்தவும், கடலில் தூண்டில் வளைவு அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

* நீரில் மூழ்கிய டிரெஜ்ஜர்
முகத்துவார ஆற்றில் மணல் திட்டுகளை அகற்றி, ஆழப்படுத்த டிரெஜ்ஜர்  என்ற இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த டிரெஜ்ஜர் இயந்திரம் பழுதானதால் அதே பகுதியில் நிறுத்தப்பட்டது. இது தற்போது முகத்துவாரத்தில் மூழ்கி காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகத்துவார ஆற்றில் மணல் திட்டுகளை அகற்ற காமராஜர் துறைமுகம் நிதி வழங்கியதாகவும், ஆனால் அந்த நிதி முறையாக செலவிடாமல் முறைகேடு நடந்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.   

* பல லட்சம் நிதி முறைகேடு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சுடுநீர், சாம்பல் மற்றும் காமராஜர் துறைமுக கழிவுகளால் முகத்துவார ஆறு சீரழிந்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் மீனவர்களுக்கு ஈடு செய்யும் வகையில் உள்ளூர் மீனவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சிஎஸ்ஆர் நிதியில் நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் என்று துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இந்த உறுதிமொழியை முழுமையாக செயல்படுத்தவில்லை எனவும், சிஎஸ்ஆர் நிதியை கையாள்வதில் முறைகேடு நடைபெறுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

* துறைமுகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் அபராதம்
எண்ணூர் கழிமுகத்துக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை கொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, காமராஜர் துறைமுகம் ரூ.8.34 கோடியை இடைக்கால இழப்பீடாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு உத்தரவிட்டது. அதேபோல் வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சுடுநீர், சாம்பல் கழிவுகளால் கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் மாசுபட்டு உள்ளது என்பதை தேசிய பசுமை தீர்ப்பாயம் உறுதிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : estuaries ,extinction ,Ennore ,Kamaraj ,fishermen , Negligence in disturbing the six Ennore estuaries polluted by Kamaraj port waste: the tragedy of the extinction of fish species; Impact on the livelihood of fishermen
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்