×

டெல்லி போராட்ட களத்தில் கூட்டம் கூடுவதை தடுக்க சாலைகளில் தடுப்புச்சுவர் முள்வேலி, ஆணிகள் பதிப்பு

புதுடெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை முடக்கும் வகையில் சாலைகளில் கான்கிரீட் தடுப்புக்கள் மற்றும் ஆணிகளை டெல்லி போலீசார் பதித்துள்ளனர். போலீசார் துன்புறுத்தல் நிறுத்தப்படாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது.

வன்முறைக்குப் பிறகும் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நிறுத்தப்படவில்லை. உபியில் இருந்து தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் போராட்ட களத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், போராட்டத்தை முடக்கும்வகையில்  டெல்லி போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப்பில் இருந்து டெல்லி வழியாக வரும் ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மின்சாரம், இன்டர்நெட், குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து எல்லையில் வாகனங்களில் நடமாட்டத்தை தடுக்கும் முயற்சியாக பல அடுக்கு தடுப்புக்கள் போடப்பட்டுள்ளது. அங்கு கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டு, கூடுதல் தடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலையில் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் முன்னேறி வராமல் தடுக்கும் வகையிலும், வாகனங்களின் டயர்களை பஞ்சர் செய்யும் வகையிலும் இதுபோன்ற ஏற்பாடுகளை டெல்லி போலீசார் செய்துள்ளனர்.
எல்லையில் கூட இல்லாத அளவுக்கு முள்வேலிகள் குவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சம்யுக் கிசான் மோர்சா சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாலைகளில் பள்ளங்களை தோண்டுவது, ஆணிகளை பதிப்பது, முள்வேலிகள் அமைத்தல், உள் சாலைகளை மூடுவது, இணையதள சேவையை நிறுத்துவது பாஜ, ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள் மூலமாக போராட்டத்தை நடத்துவது உள்ளிட்டவை அரசு மற்றும் அதன் காவல்துறையினரால் விவசாயிகளுக்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாகும். விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆதரவு பெருகி வருவதால் அரசு அச்சத்தில் உள்ளது. சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும், போலீசாரின் துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும். அது வரை அரசுடனான பேச்சுவார்த்தைக்கு இடமில்லை’ என கூறப்பட்டுள்ளது.

* எழுப்ப வேண்டியது சுவரல்ல, பாலங்கள்
விவசாயிகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டரில், ” விவசாயிகளின் போராட்டத்தை தடுப்பதற்கு சுவர்களை எழுப்பாதீர்கள். பாலங்களை கட்டுங்கள்” என அறிவுறுத்தி உள்ளார்.

* செங்கோட்டையில் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து தங்களில் ஏராளமான விவசாயிகளை காணவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறி உள்ளனர்.
* தற்போது மின்சாரம், இன்டர்நெட், குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளும் போராட்ட களத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
* குடியரசு தின வன்முறை தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* வேளாண் சட்டம் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் உறுதிபட கூறி உள்ளனர்.

Tags : crowds ,roads ,battlefield ,Delhi , Barbed wire fence on the roads to prevent crowds on the Delhi battlefield, nails version
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...