×

தமிழக அரசின் தனிச்சிறப்பு வாய்ந்த நிர்வாகத்தை அதிமுக ஆட்சிக்காலம் பழுதாக்கி விட்டது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

சென்னை: தனிச்சிறப்பு வாய்ந்த தமிழக அரசு நிர்வாக இயந்திரத்தை பத்தாண்டு காலம் அதிமுக அரசு பழுதடைய வைத்து விட்டது மிகுந்த வேதனையளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளதுடன், மாநிலத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகாலம் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது. நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடுகள் இரண்டும் வெற்று விளம்பர கொண்டாட்டமாக மாறிவிட்டது. புதிய முதலீடுகளும் இல்லை-புதிய தொழிற்சாலைகளும் இல்லை-புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை.  

அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை வடிகட்டிய ஊழல், வரலாறு காணாத ஊழல், அனைத்திற்கும் ஆளுநர் பார்வையாளராக மட்டுமே இருப்பது, தமிழகத்தின் கெட்ட வாய்ப்பாகப் போய்விட்டது. அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தின் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இடம் இல்லை. உண்மையான தகவல்களை அளிப்பதில்லை. மானியத்திலோ, நிதிநிலை அறிக்கையிலோ அறிவிப்பதை நிறைவேற்றுவதில்லை.
பதவியில் ஒட்டிக்கொண்டு, பவிசு காட்ட வேண்டும், பதவியை முறைகேடாகப் பயன்படுத்திப் பணம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பச்சை சுயநலத்திற்காக, மாநில உரிமைகளை தாராளமாக தாரைவார்த்து, ஜி.எஸ்.டி. சட்டத்தை அவசர கதியில் அமல்படுத்தி, 15வது நிதி ஆணையத்தில் உரிய நிதியைப் பெறாமல் கோட்டை விட்டு-மாநிலத்தின் நிதி உரிமையையும் பறிகொடுத்தது இந்த ஆட்சி.

மத்திய பா.ஜ. அரசின் அடிவருடியாக இருந்து முதலமைச்சர் பழனிசாமி “முத்தலாக்”  சட்டத்தை ஆதரித்தது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தது, மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்து-இப்போது இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் பாஜவிற்கு துணை போவது, அகில இந்திய கோட்டாவிற்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெறாமல் வஞ்சித்தது-அரசு மருத்துவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டையும் கொடுக்க மறுத்தது-புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக ஆதரிப்பது-தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு பறிபோவதை வேடிக்கை பார்ப்பது என அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு நேர்ந்திருக்கும் அநீதிகள் ஏராளம்.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவி வழங்க முடியாது எனக் கூறி விட்டு- ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவு தெரியாமலே-தெரிந்து கொள்ள அக்கறை காட்டாமலே-80 கோடி ரூபாயில் அவருக்கு நினைவிடம் அமைப்பது என, தமிழகத்தை சுமார் ₹5 லட்சம் கோடி கடனில் மூழ்கடித்து-மிகப்பெரிய நிதி நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறார் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எந்த நேரத்திலும் சந்திக்க வேண்டிய முதல்வர் பழனிசாமி. ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து-அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு-துறையில் உள்ள மூத்த அரசு அதிகாரிகளையும்-அரசு ஊழியர்களையும்-ஏன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் புறக்கணித்து, பல்வேறு துறைகளை ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு, ஓர் அலங்கோலமான நிர்வாகத்தை 4 ஆண்டுகள் அனைத்து மட்டத்திலும் நடத்தி-நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் ஆசிரியர்களை-அரசு ஊழியர்களை-செவிலியர்களை-மருத்துவர்களை உதாசீனப்படுத்தி, தனிச்சிறப்பு வாய்ந்த தமிழக அரசு நிர்வாக இயந்திரத்தை பத்தாண்டு காலம் அதிமுக அரசு பழுதடைய வைத்து விட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.

அதிமுக ஆட்சியில், தகவல் பெறும் ஆணையம், விழிப்புணர்வு ஆணையம், ஊழல் தடுப்புத் துறை எல்லாம் அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்கும் நிலைக்கு மாறிவிட்ட அவலம் பழனிசாமி ஆட்சியில் நடந்து விட்டது. தமிழக காவல்துறை சீர்திருத்தச் சட்டம் அதிமுக ஆட்சியில் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு-காவலர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் ஸ்காட்லாந்து யார்டு போலீசை விட திறமை மிக்க தமிழகக் காவல்துறையை சீரழித்துள்ளது அதிமுக ஆட்சி. “ஊழல் செய்வோருக்கே இந்த ஆட்சி” என்ற வகையில் லோக் ஆயுக்தா-உள்ளாட்சிகளின் ஊழல்களை விசாரிக்கும் ‘ஆம்புட்ஸ்மேன்’  அமைப்பு எல்லாம் முடக்கப்பட்டு-விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், ஏழை-எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும்-ஜனநாயக மாண்புகளுக்கும் - அரசியல் சட்டத்திற்கும் இழுக்கை ஏற்படுத்திய அதிமுக ஆட்சியின் கடைசி ஆளுநர் உரைக்கான இந்தக் கூட்டத் தொடரை திமுக புறக்கணிப்பது என முடிவெடுத்திருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2ம் கட்டமாக நாளை முதல் தென் மாவட்டங்களில் பிரசாரம் திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் 2ம் கட்ட சுற்றுப்பயண விவரம் மேற்கொள்கிறார். அதன்படி வருகிற 4ம் தேதி (நாளை) மதியம் 1 மணி ராமநாதபுரம் மாவட்டம் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி நான்கு வழிச்சாலை, பரமக்குடியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 5ம் தேதி காலை 8 மணி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கலைஞர் திடல், எட்டையாபுரம் ரோடு கோவில்பட்டியிலும், மதியம் 1 மணி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் நட்டாச்சி ஊராட்சி பட்டாண்டிவிளை திருவைகுண்டத்திலும் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

6ம் தேதி காலை 8 மணி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி மைதானம், நாகர்கோவில் நகரத்திலும், மதியம் 1 மணி திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்டம் சார்பில் வீரவநல்லூர் பேரூராட்சி, நெல்லை-அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலை அம்பாசமுத்திரத்திலும், 7ம் தேதி காலை 8 மணி தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் பேரறிஞர் அண்ணா திடல், சுரண்டை ரோடு, சங்கரன்கோவிலிலும், மதியம் 1 மணி விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பில் பட்டம்புதூர் ஊராட்சி விருதுநகரில் நடைபெறும் பிரசாரத்திலும் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து 8ம் தேதி மதியம் 1 மணி சிவகங்கை மாவட்டம் கே.வைரம்பட்டி ஊராட்சி, காரைக்குடி-திருப்பத்தூர் சாலை, திருப்பத்தூரில் நடைபெறும் பிரசாரத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அப்போது அவர் பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களையும் பெறுகிறார். இறுதியில் மக்கள் முன்னிலையிலேயே அந்த மனுக்கள் பெறப்பட்ட  பெட்டி சீல் வைக்கப்படும். தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்ததும் 100  நாட்களில் மக்களின் அனைத்துக் கோரிக்கை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : regime ,AIADMK ,state ,administration ,Tamil Nadu ,MK Stalin , AIADMK, Reign, MK Stalin, Report
× RELATED தோல்வியில் அண்ணாமலை பித்துப்பிடித்து பேசி வருகிறார்: எஸ்டிபிஐ கண்டனம்