×

உயர் மின் கோபுர விவகாரத்தில் அமைச்சர் வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயிகள் கைது: சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

பள்ளிபாளையம்: விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு கடந்த 4 வருடங்களாக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்து வருகிறது. இந்த நிலங்களுக்கும், பயிர்கள், கிணறுகளுக்கும் உரிய இழப்பீடு தரவில்லை என்று கூறி, கடந்த டிசம்பர் மாதம் மின்துறை அமைச்சர் தங்கமணியை பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேரில் சந்தித்து புகார் கூறினர்.

அப்போது பேசிய அமைச்சர், விருதுநகரில் இருந்து திருப்பூர் வரை மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளை டிசம்பர் 8ம் தேதிக்கு மேல் முதல்வர் எடப்பாடியுடன் கலந்து ஆலோசித்து அறிவிப்பதாகவும் உறுதி அளித்தார். ஆனால் அமைச்சர் அறிவித்தபடி மின் திட்டப்பணிகள் நிறுத்தப்படவில்லை. மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர் உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன்பு தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.  நேற்று கார்களில்  வந்த விவசாயிகள் ஆலாம்பாளையத்தில் இறங்கி உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். உடனே போலீசார் அவர்களை மறித்து தடுத்தனர். இதையடுத்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து நகராட்சி திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். அங்கு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Tags : minister ,house , Fasting, farmers, arrests
× RELATED புதுச்சேரியில் அரசு நிலத்தில் பாஜக...