எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட தடை: பொதுப்பணித்துறை அறிவிப்பு

சென்னை: இறுதிகட்டப் பணிகள் நடந்து வருவதால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட தடை விதித்து தமிழக பொதுப்பணித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

80 கோடியிலான ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த 27ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அன்றைய தினம் முதலே நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நினைவிடத்தை பார்வையிட்டு வந்தனர். இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை வெளியிட்ட அந்த அறிவிப்பில், ‘அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்காவின் இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகி பெங்களூருவில் தங்கியுள்ளார். அவர் வரும் 7ம் தேதி சென்னை வர உள்ளார். அப்போது, நேரடியாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார். தற்போது நினைவிடத்தை பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்திருப்பதன் மூலம் ஜெயலலிதா நினைவிடம் செல்வதில் சசிகலாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>