×

முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து 9 வயது கருப்பின சிறுமியிடம் மூர்க்கத்தனமாக நடந்த போலீஸ்: அமெரிக்காவில் போராட்டம் வலுத்தது

நியூயார்க்: அமெரிக்காவில் மனநலம் பாதித்த 9 வயது கருப்பின சிறுமியின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து மூர்க்கத்தனமாக நடந்த கொண்ட போலீசாரை கண்டித்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்காவில் கருப்பின மக்களிடம் வெள்ளையின போலீசார் பாகுபாடு காட்டுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கம். கடந்த ஆண்டு மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை போலீசார் கைது செய்யும் போது கழுத்தை முழங்காலால் நெரித்தனர். இதில் மூச்சுத்திணறி பிளாய்ட் இறந்தார். இதனால் அங்கு பயங்கர போராட்டம் வெடித்தது.

இந்நிலையில், கருப்பினத்தவர்களுக்கு எதிரான மற்றொரு இனவெறி சம்பவம் அரங்கேறி உள்ளது. நியூயார்க்கில் உள்ள ரோச்சஸ்டர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மனநலம் பாதித்த 9 வயது சிறுமியிடம் போலீசார் மிக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். சிறுமியின் குடும்பத்தினரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து போலீசார் அச்சிறுமியின் வீட்டுக்கு வந்துள்ளனர்.

மனநலம் பாதித்த அந்த சிறுமியை அவர்கள் காரில் ஏற்றிச் செல்ல முற்பட்டுள்ளனர். சிறுமி வர மறுத்து அடம்பிடித்து போலீசாரை அடித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், கையில் விலங்கிட்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். மேலும் சிறுமி என்று கூட பாராமல் முகத்தில் காரத்தன்மை கொண்ட பெப்பர் ஸ்பிரே அடித்துள்ளனர். அச்சிறுமி கதறி அழுதும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி உள்ளது.
இச்சம்பவத்தை கண்டித்து நியூயார்க்கில் பல இடங்களில் கருப்பினத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் விவகாரமானதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மற்ற இரு அதிகாரிகள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். ஆனாலும், போராட்டங்கள் பல இடங்களில் தீவிரமாகி வருவதால் அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Tags : Fight ,US , New York, black girl, police, struggle
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!