×

மகாராஷ்டிராவில் அட்டூழியம்: போலியோ மருந்துக்கு பதில் குழந்தைகளுக்கு சானிடைசர்

மும்பை: மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக குழந்தைகளுக்கு சானிடைசர் தரப்பட்ட விவகாரம் அதிர்ச்சி அளித்துள்ளது.  
கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், யவட்மால் மாவட்டம், கப்சிகோப்ரி கிராமத்தில் உள்ள பன்போரா ஆரம்ப சுகாதார மையத்திலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தரப்பட்டது. சொட்டு மருந்து தரப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தைகள் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அப்போதுதான், போலியோ மருந்துக்கு பதிலாக தவறுதலாக குழந்தைகளுக்கு இரண்டு சொட்டு சானிடைசர் வழங்கப்பட்டது தெரியவந்தது. மொத்தம் 12 குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டுள்ளது.

உடனே 12 குழந்தைகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது உடல் நலம் தேறிவிட்டதாகவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டர் எம்.டி.சிங் தெரிவித்தார்.

Tags : children ,Maharashtra ,Sanitizer , Maharashtra, polio medicine
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...