மத்திய ரயில்வே வாரியத்திலிருந்து உத்தரவு வரும் வரை வழக்கமான ரயில்கள் இயக்கப்படாது: தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூரு: மத்திய ரயில்வே வாரியத்திலிருந்து அட்டவணை வந்த பின் வழக்கமான ரயில்கள் இயக்குவது தொடர்பாக அறிக்கை வெளியிடப்படும் என்று தென்மேற்கு ரயில் நிர்வாகம் தெரிவித்தது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு  குறைய தொடங்கியதால் படிப்படியாக ரயில் சேவையும் ஆரம்பிக்கப்பட்டது. அப்படி ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் சிறப்பு ரயில்களாகவும், முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், தின  பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வழக்கமாக ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.  இது தொடர்பாக தென்மேற்கு ரயில்வே அதிகாரி கூறியதாவது: ``கொரோனா  பாதிப்புக்கு பின்னர் வழக்கமான ரயில்கள் நிறுத்தப்பட்டு பயணிகளின் வசதிக்காக பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்ய வேண்டும் என்றால் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும். ஆனால்  தின பயணிகள் வழக்கமாக ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

 அதேபோல், மாதாந்திர பாஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். வழக்கமான ரயில்கள், மாதாந்திர பாஸ் வழங்க வேண்டும் என்றால் மத்திய ரயில்வே வாரியத்திலிருந்து உத்தரவு வர வேண்டும். உத்தரவு கிடைக்கும் வரை  வழக்கமான ரயில்கள், பாஸ் வழங்குவது குறித்து எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாது.  அதேபோல், தற்போது மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதில் ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து  கூறப்பட்டுள்ளது. எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற பிங்க் புத்தகம் வரும். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இந்த புத்தகம் அடுத்த வாரம் தான் எங்களுக்கு கிடைக்கும். அதுவரை தினபயணிகள்  ரயில்வே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

மாதாந்திர பாஸ் வழங்க வேண்டும்

தின பயணிகள் கூறியதாவது: தினமும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தின பயணிகள் வேலை செய்கின்றனர். பாஸ் இல்லாத காரணத்தால் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வந்து டிக்கெட்  கவுன்டரில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி செல்ல வேண்டியுள்ளது. இதில் பாதிப்பு ஏற்படுகிறது. அதே போல் சில நேரங்களில் டிக்கெட் கவுன்டரில் கூட்டம் அதிகமாக இருந்தால் வாங்க முடியாமல் ரயிலை தவற விட நேரிடுகிறது.  இதனால் தின பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மாதாந்திர பாஸ், வழக்கமான ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories:

>