×

கலபுர்கி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்கான நிதியை பயன்படுத்த தடைவிதிக்கும் மாநில அரசு: மாஜி அமைச்சருமான பிரியங்க் கார்கே தகவல்

கர்நாடக பேரவை தொடரில் நேற்று காலை கேள்வி பதில் நேரம் நடைபெற்றது. அப்போதுகாங்கிரஸ் கட்சி உறுப்பினரும் மாஜி அமைச்சருமான பிரியங்க் கார்கே, “கலபுர்கி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்காக 2019-20 மற்றும் 2020-21  நிதியாண்டில் 1992.82 லட்சம் மற்றும் 8.3 கோடி விடுவிக்கப்பட்டிருந்தது. இந்நிதி இப்போது பயன்படுத்தாத வகையில் அரசு தடுத்துள்ளது. அவசிய பணிகள் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அதற்கு ஒதுக்கிய நிதி  பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியாது என்பதை நீர்ப்பாசன துறை அமைச்சர் ரமேஷ் ஜாரகிஹோளி இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள்  குறுக்கிட்டு  கொரோனா வைரசின் காரணமாக கருவூலத்திற்கு வரவேண்டிய நிதிகள் வரவில்லை. அதன் காரணமாக கலபுர்கி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி நிதித்துறை அதிகாரிகளுக்கு  உடனடியாக கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் இந்நிதி  வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது அதே நேரம் இதை தடுத்து நிறுத்தவும் முடியாது என்று அப்போது குறிப்பிட்டார். இதை சுட்டிக்காட்டி மாஜி அமைச்சர் பிரியங்க் கார்கே தொடர்ந்து பேசுகையில்,  அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் வளர்ச்சி நிதியை நிறுத்தி வைக்க முடியாது என கூறியுள்ளார். அப்படி இருந்தாலும் மாநில அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது எந்த வகையில் நியாயம்? வேறு பணிக்கு அதை பயன்படுத்தியது எப்படி?  என போர்க்கொடி  உயர்த்தினார். இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருந்த போது உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை  குறுக்கிட்டு, உங்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது இந்நிதி பயன்படுத்தப்படவில்லை. அதே நேரம் எங்கள் ஆட்சி  முடிவடைவதற்குள் கலபுர்கி  மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கி பணிகள் மேற்கொள்வோம்  என கூறினார்.

அமைச்சர்கள் பசவராஜ் பொம்மை, கோவிந்த் கார்ஜோள்  விளக்கம் அளித்தாலும் மாஜி அமைச்சர் பிரியங்க் கார்கே அதை ஏற்கவில்லை. தொடர்ந்து அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். இதன் காரணமாக பேரவையில் ஆளுங்கட்சி  மற்றும் எதிர்க்கட்சி இடையே சில நிமிடம் காரசார விவாதம் நடந்தது.

உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்
அமைச்சர் மாதுசாமி  பேசியதாவது: மாஜி அமைச்சர் பிரியங்க் கார்கே விதி மீறல் குறித்து இப்போது விரிவாக பேசுகிறார். அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் விளக்கம் அளித்தாலும் அதை கேட்காமல் போராட்டம் நடத்துகிறார். இப்போது கேட்ட  இந்த கேள்வியை உங்கள் (காங்கிரஸ், மஜத கூட்டணி) ஆட்சியின் போது ஏன் கேட்கவில்லை? அத்துடன் ஒயிட் டாப்பிங், இரும்பு பாலம் அமைப்பதற்கு எந்த நிதி பயன்படுத்தப்பட்டது? என்பதையும் மாஜி அமைச்சர்  பிரியங்க் கார்கே விளக்கம்  அளிக்கவேண்டும்’’ என்றார்.

Tags : State government ,Priyank Karke ,Kalaburgi ,district , State government bans use of funds for development work in Kalaburgi district: Former Minister Priyank Karke
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...