×

பாளையங்கோட்டையில் போட்டியிட அதிமுகவில் குடுமிப்பிடி

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதிக்கு,  கிராமமே இல்லாத தொகுதி, நூற்றாண்டு கண்ட மத்திய சிறை, பாண்டிய மன்னர்கள் கோட்டை கட்டி வாழ்ந்த இடம் என எத்தனையோ பெருமை உண்டு. நெல்லை மாநகராட்சியின் 38 வார்டுகளை மட்டுமே உள்ளடக்கியது பாளை தொகுதியாகும்.2 லட்சத்து 63 ஆயிரத்து 944 வாக்காளர்களை கொண்ட பாளையங்கோட்டை தொகுதியில் 30 சதவீதம் மக்கள் பீடி சுற்றும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் மேலப்பாளையத்தில் பீடி சுற்றும் தொழிலே பிரதானம். பாளையங்கோட்டையில் தினமும் நிலவும் போக்குவரத்து ெநருக்கடி, இணைப்புச் சாலை திட்டங்கள் இல்லாதது, ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஸ்தம்பிப்பு ஆகியவை தொகுதியின் தீவிர பிரச்னைகளாக தெரிகின்றன.

போக்குவரத்து நெரிசல் மிக்க குலவணிகர்புரம் மேம்பாலம் இன்று வரை ஆளும்கட்சி பிரமுகரின் அணுகுமுறையால் செயல்பாட்டுக்கு வரவில்லை. தியாகராஜநகர் மேம்பாலமும் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு வருவது சந்தேகமே. அவ்வளவு ஏன், தமிழக முதல்வரே திறந்து வைத்த தாமிரபரணி புதுமேம்பாலம் 6 மாதங்களை கடந்தும் திறக்கப்படாமல் நடைபாதை தளமாக காட்சியளிக்கிறது. ஆளும்கட்சிக்கு இந்த தொகுதி பலவீனமாக இருந்தபோதிலும், அந்த தொகுதியில் போட்டியிட கூட்டணி கட்சியினர் யாரும் ஆர்வம் காட்டாததால், அதிமுகவினரே இத்தொகுதியில் களம் இறங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதனால், ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.யாகவும், நெல்லை மாநகராட்சி மேயராகவும் இருந்த விஜிலா சத்யானந்த் இத்தொகுதியில் போட்டியிட அதிக ஆர்வம் காட்டுகிறார். அதே சமயம் நெல்லை மாவட்ட அதிமுக செயலாளரின் ஆதரவுடன் ஜெ. பேரவை செயலாளர் ஜெரால்டு, பகுதி செயலாளர் ஜெனி ஆகியோரும் தொகுதிக்கான வேட்பாளர் கனவில் தீவிரமாக உள்ளனர். மேலும், அபரூபா சுனந்தினி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மகபூப்ஜான், பகுதி செயலாளர் ஹயாத், அசன்ஜாபர் அலி ஆகியோருக்கும் வேட்பாளர் கனவு உள்ளது.

பாளையில் பெரும்பாலும் சிறுபான்மை வகுப்பினருக்கே சீட் கிடைக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது. மாவட்ட அதிமுகவில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் கோஷ்டி பூசல், வேட்பாளர் தேர்விலும் வெளிப்படும் வாய்ப்புகள் அதிகம். பாளை தொகுதி கூட்டணி கட்சிக்கென்றால், சிறுபான்மை ஓட்டுக்களை காரணம் காட்டி பாஜ பவ்யமாய் ஒதுங்கிக் கொள்ள, முகமது அலியை முன் வைத்து தேமுதிக மட்டும் பல்லவி பாட வாய்ப்புள்ளது.  பாளையங்கோட்டையில் கால் நூற்றாண்டாக அதிமுக வெற்றிக்காக பல குட்டிகரணங்கள் அடித்ததுண்டு. ஆனால் எதுவுமே இதுவரை பலிக்கவில்லை. இந்த தேர்தலிலும் அது பிரதிபலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.



Tags : AIADMK ,Palayankottai , Family in AIADMK to compete in Palayankottai
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...