×

இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை சம்பவத்தில் கணவர், உறவினர்களிடம் உதவி கலெக்டர் விசாரணை

திங்கள்சந்தை: இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை சம்பவத்தில் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். நாகர்கோவில் அடுத்த வில்லுக்குறி மணக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ரெதீஸ்குமார் (26). கொத்தனார். இவரது மனைவி ஜெனிசா (22). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. திருமணத்தின் போது 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.25லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணத்துக்கு பின், ஜெனிசா தனது கணவர் வீட்டாருடன் வசித்து வந்தார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், ஜெனிசாவை, ரெதீஸ்குமார் கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜெனிசாவின் தாயார், ஸ்ரீகுமாரி வந்து தனது மகளை அழைத்து சென்றார். அதன் பின்னர் இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஜெனிசா மனம் உடைந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ஸ்ரீகுமாரி வெளியே சென்று இருந்தார். வீட்டில் தனியாக இருந்த ஜெனிசா, தனது வாழ்க்கை இப்படி ஆகி விட்டதை என எண்ணி வருந்தி வீட்டின் உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அறிந்ததும் இரணியல்  இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் வந்து, ஜெனிசாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வீட்டில் நடந்த சோதனையில் ஒரு கடிதம் சிக்கி உள்ளது. அந்த கடிதத்தை ஜெனிசா தான் எழுதி உள்ளார். அதில், சிறு வயதில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். திருமண வாழ்க்கையும் இப்படி ஆகி விட்டது. எனக்கு நிம்மதி இல்லை. நான் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன். என்னை எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுமைப்படுத்தினர். இதை தட்டிக்கேட்ட எனது தாய் மற்றும் மாமன்களையும் அவதூறாக பேசினர். என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. எனது சகோதரர்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான சுமார் ஒன்றரை வருடங்களில் ஜெனிசா தற்கொலை செய்திருப்பதால், பத்மநாபபுரம் உதவி கலெக்டரும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக ரெதீஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடக்கிறது. ஜெனிசாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்படும். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என போலீசார் கூறினர்.

Tags : Assistant Collector ,relatives ,Iraniyal , Suicide
× RELATED இரணியல் அருகே அடுத்தடுத்து வாகனங்கள்...