×

தொடர்மழையால் வரத்து குறைவு: சின்ன வெங்காயம் விலை கிடுகிடு

திண்டுக்கல்: தொடர்மழை காரணமாக திண்டுக்கல் வெங்காயம் மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. திண்டுக்கல்லில் வெங்காயத்துக்கு என்று தனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் (பல்லாரி) என இரண்டு வகையான வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சின்ன வெங்காயத்தை பொருத்தவரை திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர், கரூர், நாமக்கல் மாவட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வரும்.

அதேபோல் பெரிய வெங்காயத்தை பொருத்தவரை மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த மாதம் தமிழகத்தில் அடித்த புயல் மற்றும் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டிற்கு சராசரியாக 6000 மூடை சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது 1000 முதல் 1500 மூடைகள் வரையே விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் வரை கிலோ ரூ.60க்கு விற்பனையான சின்ன வெங்காயம் வரத்து குறைவு காரணமாக தற்போது தரத்தைப் பொருத்து ரூ.80 முதல் 110 வரை விற்பனையாகிறது. இந்த காலகட்டங்களில் வெங்காயம் விலை ஏற்றத்திற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மழை காரணமாக விளைநிலங்களில் வெங்காயம் அழுகி விட்டதன் காரணத்தினால் தற்போது விலை ஏற்றம் கண்டுள்ளது. தற்போது நடவு செய்யப்பட்டுள்ள வெங்காயம் விற்பனைக்கு வரும் வரை இந்த விலை ஏற்றம் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Onions
× RELATED தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக...