×

ஓராண்டாக காணொலி மூலம் நடந்த நிலையில் மார்ச் முதல் சுப்ரீம்கோர்ட்டில் நேரடி விசாரணை துவக்கம்: தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தகவல்

புதுடெல்லி: கடந்த ஓராண்டாக காணொலி மூலம் நீதிமன்ற விசாரணைகள் நடந்த நிலையில் வரும் மார்ச் முதல் சுப்ரீம்கோர்ட்டில் நேரடி விசாரணை நடைபெறும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தெரிவித்தார்.  கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு மார்ச் கடைசி வாரம் முதல் உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைகள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றன. இந்த காணொலி காட்சி மூலமே விசாரணைகள் நடத்தப்பட்டு பல முக்கியமான தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கினர்.

கிட்டதிட்ட ஓராண்டாக காணொலி காட்சி மூலமே விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் பெரும்பாலும் விலக்கிக் கொள்ளப்பட்டதால் வழக்கம் போல் நேரடி விசாரணையை தொடங்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.  சமீபத்தில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் மற்றும் பிற வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச  நீதிமன்றத்தில் நேரடி விசாரணைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனக்கோரி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

மேலும், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கும் விசாரணைகளால் வழக்கறிஞர்கள் பல்வேறு மன  உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக அவர்கள் கூறினர். இவ்விவகாரம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வழக்கறிஞர்கள் மற்றும் மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ‘உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் வரும் மார்ச் முதல் வாரத்திற்குள் தொடங்கப்படலாம். நேரடி விசாரணையை தொடங்க நீதிபதிகள் தயாராக உள்ளனர். ஆனால், சுகாதார மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன’ என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் வரும் மார்ச் முதல் நேரடி விசாரணை நடக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளதால், நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் வழக்கமான நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : hearing ,SA Babde ,Supreme Court ,video conference , A year-long live video trial begins in the Supreme Court from March: Chief Justice SA Babde
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...