×

பத்தாண்டு கால அரசின் தோல்வியைப் பறைசாற்றும் ஆளுநர் உரை: வைகோ விமர்சனம்

சென்னை : பத்தாண்டு கால அதிமுக அரசின் தோல்வியைப் பறைசாற்றும் விதமாக ஆளுநர் உரை இருந்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையைத் தொடங்கும்போது, 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையின் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டு இருக்கும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி என்ற முறையில் திமுகவினர் கேள்வி எழுப்புவது ஜனநாயக உரிமை. ஆனால், அதற்கு ஆளுநரே திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பார்த்து “வெளிநடப்பு செய்துவிட்டுப் போய்விடுங்கள்” என்று கூறியது மரபை மீறிய செயல் ஆகும். அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள எல்லைகளை மீறி தமிழக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மத்திய அரசுக்குச் சேவகம் செய்யும் வகையில் மாற்றவும் முனைந்து வருவது கண்டனத்துக்கு உரியது.

காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் என முதல்வருக்குக் ‘காவிரி காப்பாளன்’ என்று பட்டம் சூட்டி ஆளுநர் மகிழ்ந்திருக்கிறார். ஆனால், மத்திய பாஜக அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் புதிய உரிமங்கள் வழங்கி இருப்பதை அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் இரட்டை வேடம் போடுகிறது என்பதே உண்மை நிலை ஆகும்.

மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக்கொள்கை குறித்து உறுதியான கருத்தை முன்வைக்காமல், இருமொழித் திட்டம் தொடரும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது கண்துடைப்பாகும்.

கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டுக் கிடக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மீட்சிக்கு அதிமுக அரசிடம் எவ்விதத் திட்டமும் இல்லை என்பது ஆளுநர் உரையில் தெரிகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறாமல் தமிழக மாணவர்களைத் தொடர்ந்து நம்பிக்கை இழக்கச் செய்து வரும் அதிமுக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதை ஆளுநர் பாராட்டுவதை ஏற்க முடியாது. அதைப் போன்றே மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மறுத்துள்ள மத்திய அரசுக்கு ஆளுநர் உரையில் கோரிக்கை கூட இடம் பெறவில்லை.

புரெவி, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பாரபட்சம் இல்லாமல் முழுமையான உதவித்தொகை வழங்கவும் உறுதி கூறப்படவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால் வேலை இழப்புக்கு ஆளான லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

காவிரி-குண்டாறு இணைப்பு, அவிநாசி-அத்திக்கடவு போன்ற திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டு இருப்பதை மீண்டும் முலாம் பூசி ஆளுநர் உரையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விலைவாசி உயர்வுக்கு அடிப்படையாக உள்ள பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்கவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் ஆளுநர் உரையில் எந்தவித அறிவிப்பும் இல்லை.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் தமிழக அரசு தயாராக இல்லை என்பது ஆளுநர் உரை மூலம் வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது.

மொத்தத்தில் பத்தாண்டு கால அதிமுக அரசின் தோல்வியைத்தான் ஆளுநர் உரை பறைசாற்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Governor ,government ,Waiko , வைகோ, விமர்சனம்
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...