×

ராமனின் இந்தியாவில் பெட்ரோலின் விலை ரூ.93, சீதையின் நேபாளத்தில் ரூ.53, ராவணன் ஆண்ட இலங்கையில் ரூ.51 :சுப்பிரமணியன் சுவாமி

சென்னை : கொரோனா லாக்டவுன் போடப்பட்டபோது, கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத சரிவை நோக்கிச் சென்றது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மற்ற நாடுகளில் குறையத் தொடங்கியது. ஆனால், இந்தியாவில் மட்டும் அதன் விலை குறைந்தபாடில்லை. விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது.பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.30, அதன்பின் மத்திய, மாநில அரசு விதிக்கும் வரிகள், டீலர் கமிஷன் ஆகியவை இணைந்து கூடுதலாக ரூ.60 சேர்த்து ரூ.90க்கு விற்பனை செய்வதாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி முன்பே குற்றஞ்சாட்டியிருந்தார்.

இச்சூழலில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரக் கூடும் என்று கூறப்படுகிறது. இதனை விமர்சிக்கும் விதமாக சுவாமி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். எப்போதுமே பாஜவை நேரடியாகவே குற்றஞ்சாட்டும் அவர், இம்முறை ராமாயணத்தை மேற்கோள் காட்டி நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுடன் ஒப்பிட்டு நுணுக்கமாக விமர்சித்திருக்கிறார்.

“ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோலின் விலை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53, ராவணன் ஆண்ட இலங்கையில் ரூ.51” என்று தனது ட்வீட்டில் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். ராமாயணத்தின்படி ராம ராஜ்யம் நடக்கும் இந்தியாவில் விலை குறையாமல், ஏன் உயர்ந்துகொண்டே போகிறது என்பதே சுவாமியின் விமர்சனமாக இருக்கிறது.

Tags : Raman ,India ,Seetha , சுப்பிரமணியன் சுவாமி
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...