×

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா : பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி 500 கலைஞர்கள் இசை அஞ்சலி

திருவையாறு:திருவையாறில் தியாகராஜர் சுவாமிகளின்  174வது ஆராதனை விழாவையொட்டி இன்று காலை நடந்த பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில்  சுமார் 500 கலைஞர்கள் கலந்துகொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 174வது ஆராதனை விழா நேற்று மங்கள இசையுடன் தொடங்கியது. வழக்கமாக இந்த ஆராதனை விழா 5 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவிற்கு தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். செயலாளர் அரித்துவாரமங்கலம் பழனிவேல் வரவேற்றார். விழாவை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து  இசை நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு திருமஞ்சன வீதியில் உள்ள  தியாகராஜர் வாழ்ந்த வீட்டிலிருந்து  உஞ்சவிருத்தி பஜனை பாடி தெற்கு வீதி, கும்பகோணம் சாலை வழியாக தியாகராஜர்  நினைவிடம் அமைந்துள்ள விழா பந்தலை அடைந்தது.  தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தது.

பின்னர் காலை  8.30 மணிக்கு விழா பந்தலில் மங்கள இசை நடந்தது. 9  மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது. இதில்  சுதா ரகுநாதன், ஓ.எஸ்.அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல்,  பிரபஞ்சம் பாலசந்திரன், பாபநாசம்  அசோக் ரமணி, முஷ்ணம் ராஜாராவ் ஷேக் மகபூப் சுபானி, காலீஷா பீ மகபூப் உள்பட 500க்கும் மேற்பட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள்  கலந்துகொண்டு ஒரே குரலில்  பஞ்சரத்ன கீர்த்தனைகள்  பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 10 முதல் 11 மணி வரை இசை நிகழ்ச்சி நடந்தது.   மாலை 5 மணிக்கு இசை நிகழ்ச்சி தொடங்கி 8 மணிவரை நடைபெறுகிறது.  7.30 மணிக்கு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம்  நடைபெறுகிறது. இரவு ஆஞ்சேநயர் உற்சவத்துடன் விழா நிறைவு  பெறுகிறது.விழாவில்  தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், சந்திரசேகர மூப்பனார்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiyagaraja Worship Festival ,artists , பஞ்சரத்ன கீர்த்தனைகள்
× RELATED குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடைகால...