மஞ்சூர் அருகே பசுமாட்டை அடித்து கொன்ற சிறுத்தை: வனத்துறை தீவிர கண்காணிப்பு

மஞ்சூர்:  மஞ்சூர் அருகே மேய்ச்சலில் இருந்த பசு மாட்டை சிறுத்தை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், கடந்த சில  மாதமாக சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது. நேற்று முன்தினம் இப்பகுதியை சேர்ந்த விவசாயி சதீஷ் என்பவரின் பசு மாடு குடியிருப்பை ஒட்டி  உள்ள தேயிலை தோட்டத்தில் ேமய்ந்து கொண்டிருந்தது. அப்போது, தேயிலை செடிகளுக்கிடையே மறைந்திருந்த சிறுத்தை திடீரென பசுவின் மீது பாய்ந்து தாக்கியது. இதில், பசு மாடு சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தது. பின்னர், பசுவை பாதியை சாப்பிட்டு விட்டு மீதியை செடிகளுக்கு இடையே விட்டுச்சென்றது. சிறிது நேரத்தில் தேயிலை பறிக்க சென்ற  தொழிலாளர்கள் பசுவின் உடலை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

குந்தா ரேஞ்சர் சரவணன் உத்தரவின்பேரில், வனவர் ரவிக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கால்நடை மருத்துவர் கணேசன்  தலைமையிலான மருத்துவ குழுவினர் பசுவின் உடலை உடற்கூறு பரிசோதனை செய்ததில் சிறுத்தை தாக்கி பசு இறந்தது தெரியவந்தது. ஏற்கனவே 2  முறை இரவு நேரத்தில் சதீஷ் வீட்டு முன்பு படுத்திருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை தாக்க முயன்றதாகவும், நாய் குரைத்ததில் சிறுத்தை அங்கிருந்து  ஓடி வனப்பகுதிக்குள் சென்றதாகவும் கூறப்படுகிறது. சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய  மட்டக்கண்டி பகுதியில் வனத்துறையினர் தீவிர  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>