×

தொழில்சார் திட்டங்கள் இல்லை தனியார்மயமாக்கம் தவறான முடிவு: மத்திய பட்ஜெட்டுக்கு வர்த்தக சங்கம், வியாபாரிகள் கண்டனம்

மதுரை: தனியார்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு, அரசின் சரியான முடிவல்ல என மத்திய பட்ஜெட்டுக்கு, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்  உட்பட பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.மத்திய பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய பட்ஜெட்டில் பாதகமான பல்வேறு அறிவிப்புகளே அதிகமாக உள்ளது மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது.  ரயில்வேத்துறைக்கு ரூ.1,10,055 ஆயிரம் கோடிக்கு அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தாலும், தென்தமிழகத்தை பொறுத்தவரை மதுரைக்கு மெட்ரோ ரயில்  திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை.

பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும், குறிப்பாக பாரத் பெட்ரோலியம், ஆயுள் காப்பீட்டுக்கழகம், ஏர் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேசன், ஷிப்பிங்  கார்ப்பரேசன் போன்றவற்றை தனியார்மயமாக்குவது என்ற அறிவிப்பும் நாட்டிலுள்ள முக்கிய துறைமுகங்களும், முக்கிய விமானநிலையங்களும்,  முக்கியமான ரயில்வே வழித்தடங்களும் தனியார்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பும் அரசின் சரியான முடிவல்ல.இதுசம்பந்தமாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர்தான், மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.  வேலைவாய்ப்பற்றவர்களுக்கு எவ்வித அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.விரிவான விபரங்கள் இல்லை சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (மடீட்சியா) தலைவர் முருகானந்தம்: சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்ற விரிவான விபரங்கள் எதுவும் இல்லை.

கொரோனா தொற்று காரணமாக குறு, தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இந்நிறுவனங்களுக்கு அறிவித்த  அவசர கால கடன், ஜிஎஸ்டி வரியில் வட்டி சலுகை, ரிட்டன் தாக்கல் செய்வதில் கால நீட்டிப்பு போன்றவை இன்னும் முறையாக  சென்றடையவில்லை. இதனால் பாதிப்பிலிருந்து இன்னும் சிறு தொழில் நிறுவனங்கள் மீள முடியாத நிலையிலேயே உள்ளன.மெட்ரோ ரயில் போச்சு தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம்: மதுரை நகர் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம்  அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பையும், தனிநபர் வருமான வரி விகிதத்தையும்  குறைக்காததை பெரும் ஏமாற்றமாக கருதுகிறோம்.

ஜிஎஸ்டியில் உள்ள குறைகளை தீர்க்க புதிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதன்பேரில் நடவடிக்கை  எடுக்காதது, அறிவிப்பு வெளியிடாதது வருத்தமளிக்கிறது.தொழில்சார் திட்டமில்லை மதுரை அப்பளம், வத்தல் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்க மாநிலத் தலைவர் திருமுருகன்: தொழில் சார்ந்த திட்டங்கள்  இல்லாத பட்ஜெட்டாக அமைந்துள்ளது. கொரோனாவில் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கும், தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டமும்  அறிவிப்பில் இல்லை.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : traders ,Trade union , Professional plans No privatization Wrong decision: Trade union, traders condemn the federal budget
× RELATED கடைகளுக்கு விடுமுறை அளித்து 100 சதவீதம்...